சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில், அவரின் இந்தச் செயலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பின மக்களுக்கு எதிரான ஓடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தச் சூழலில், இக்கலவரங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்களை 'குண்டர்கள்' என விமர்சித்ததோடு, போராட்டத்தைக் காரணம் காட்டி பொதுமக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியானால், துப்பாக்கிச் சூடு தொடங்கப்படுவதோடு, தேசியப் பாதுகாப்புப் படையும் அனுப்பப்படும் என தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்து மக்களை மிரட்டும் விதமாகவும், வன்முறையை ஆதரிக்கும் விதமாக உள்ளதாகவும், அவரது கருத்தை நீக்கிவிட்டது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டரின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், இதற்குப் பதிலடி தரும் விதமாக சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரின் இந்தச் செயலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான 'மையம்' ட்ரம்பின் செயலுக்கு எதிராக தொடர்ந்துள்ள இந்த வழக்கில், "மே 28ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட 'ஆன்லைன் தணிக்கைக்கு எதிரான செயல் உத்தரவு' என்ற உத்தரவு சட்டத்தின் முதல் திருத்தத்தைப் பொருட்படுத்தாமல் மீறியுள்ளது. அதிபரின் விருப்பத்துக்கும் நன்மைக்கும் ஏற்ப கருத்துகளை மாற்றியமைக்குமாறு அரசு ஆன்லைன் ஊடகங்களுக்கு உத்தரவிடமுடியாது. அதிபரின் செயல் பேச்சுச் சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.