35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும் போது அதிலிருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
லண்டனை சேர்ந்த 19 வயதான அலானா கட்லாண்ட் என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். தனது படிப்பு தொடர்பான பயிற்சிக்காக ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் ,ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் தான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பியுள்ளார்.
அப்போது விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்தஅவர், நேராக விமானத்தின் கதவருகே சென்றுள்ளார். பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் விமான கதவை திறந்துள்ளார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் உருவானது. மேலும் கதவு திறக்கப்பட்டதால் விமானம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது விமானத்திலிருந்து அவர் வெளியே குதிக்க முயன்றுள்ளார்.
ஆனால் உடனடியாக அருகில் இருந்த பயணி ஒருவர் அவரது காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விமானத்தின் கதவை மூட முயன்றுள்ளார். ஆனால் அதையும் மீறி அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து குதித்தார். அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர் எதற்காக விமானத்தில் இருந்து குதித்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அவரை காப்பாற்ற முயன்ற நபர் தெரிவிக்கையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.