Skip to main content

பிராமணருக்கு அக்ரகாரம் ஏற்படுத்தி கொடுத்த ஜமீந்தார்; பழமையான செப்புப்பட்டயம் கண்டுபிடிப்பு!

Published on 09/04/2025 | Edited on 09/04/2025

 

Sayalkudi zamindar who gave alms to the Brahmin

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகுமார சேதுபதி ஆட்சியில், அவருடைய பாளையக்காரரான சாயல்குடி ஜமீந்தார், பிராமணருக்கு அக்ரகாரம் ஏற்படுத்திக் கொடுத்த செப்புப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசித்து வரும் ஆதித்யா சம்பத்குமார் என்பவர் தனது பெற்றோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டயம் இருப்பதாக  ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் கடலாடி பத்தரகாளியம்மன் கோயில் அருகிலுள்ள காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் இருந்த பட்டையம் படித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, 600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட பட்டையத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29-ம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விசைய ரகுனாதச் சேதுபதி என உள்ளது.

Sayalkudi zamindar who gave alms to the Brahmin

எனினும் இதன் ஆண்டு சிவகுமார சேதுபதியை குறிக்கிறது. அவர் ஆட்சியில், சேது சமஸ்தானத்தின், பாளையம் கிடாத்திருக்கை நாட்டில், சாயல்குடியிலிருக்கும் குமாரமுத்து விசைய ரகுனாத அய்வாய்ப்புலி பெரிய கறுத்துடையார் சேருவைகாரர், சேது மார்க்கம் கடலாடியில், விசைய ரெகுனாதப் பேட்டையில், அக்கிரகாரம் ஏற்படுத்தி அதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் வெங்கிட்டராம அய்யங்காருக்கு அக்கிரகாரப் பிரதிட்டை பண்ணிக் கொடுத்து, தனது காணியாட்சியாய் வருகிற காக்கைகுட்டம் என்ற ஊரை கல்லுங் காவேரி புல்லும் பூமியும் உள்ளவரை சர்வமானியமாக கொடுத்துள்ளார்.

Sayalkudi zamindar who gave alms to the Brahmin

இத்தானத்தை பாதுகாப்பவர்கள் கங்கைக் கரையில் சிவ, விஷ்ணு, பிரம்மா பிரதிஷ்ட்டை, கோடி கன்னியர் தானம், கோ தானம், சூரிய, சந்திர கிரகண காலத்தில் பண்ணினால் எந்தப்பலனுண்டோ அதை அனுபவிப்பர். இதற்கு யாராவது தீங்கு செய்தால் கங்கைக் கரையிலே, காராம் பசுவை கொன்ன தோஷத்திலே போவார்கள் எனவும், இதன் சமஸ்கிருதப் பகுதியில் பிறர் கொடுத்ததை பாதுகாத்தால் இரு மடங்கு புண்ணியம். அதை அபகரித்தால் தனது புண்ணியமும் போகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பரிக்கு நகுலன், கரிக்கு இந்திரன், அனும கேதனன், கெருட கேதனன், சிங்க கேதனன் உள்ளிட்ட மன்னரின் 74 விருதுப் பெயர்கள் இதில் உள்ளன. மானியமாக கொடுக்கப்பட்ட காக்கை குட்டம் கடலாடி அருகிலுள்ளது. 

Sayalkudi zamindar who gave alms to the Brahmin

கி.பி.18-ம் நூற்றாண்டு அமைப்பிலுள்ள சாயல்குடி அரண்மனையின் தற்போதைய ஜமீந்தாரும், அவர் தந்தையும் விசைய ரகுனாத பெரிய கறுத்துடையார் சேருவைகாரர் பட்டத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாலும், கிடாத்திருக்கை எனும் பெயரில் பாளையம் இருந்தாலும் அதன் ஆளுநர் சாயல்குடியில் இருப்பதாக பட்டையத்தில் கூறப்பட்டுள்ளதாலும் சாயல்குடி ஜமீந்தார் தான் கிடாத்திருக்கை பாளையக்காரர் என அறியமுடிகிறது. நாயக்கர் போல சேதுபதிகளும் தங்கள் நாட்டை பல பாளையங்களாக பிரித்து ஆண்டுள்ளனர். பிராமணருக்குத் தானமாக வழங்கப்பட்ட இடம், ஊரை பிறருக்கு விற்கும்போது செப்புப்பட்டயம் நில ஆவணமாக வாங்கியவர்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்