Skip to main content

இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்து ரகசிய ஆலோசனை; புதின் சீனாவுக்கு எடுத்து சென்ற மர்ம சூட்கேஸ்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

briefcase that Russian President Putin took to China

 

சமீபத்தில் ஏமன் கடற்கரை பகுதியில்  சென்று  கொண்டிருந்த யு.எஸ்.எஸ் கார்னி எனப்படும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி போராளிகள் அமைப்பினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட பலம் வாய்ந்த ஏவுகணைகளை அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் கார்னி இடைமறித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் மீது ஹவுதி போராளிகள் குழு இரண்டு மூன்று ஏவுகணைகளை தொடர்ந்து ஏவியதாகவும், அதற்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும் ஏமனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராகவும் அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. அந்த கண்டன அறிக்கையில், “யுஎஸ்எஸ் கார்னி போர் கப்பலை நோக்கித்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி படையால் ஏவப்பட்ட மூன்று தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை கடந்த 24 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தி உள்ளோம். இதனால் மத்திய கிழக்கு கடல் பகுதிகள் மற்றும்  ஏமன் கடல் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்  ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு இருப்பது இஸ்ரேல் பாலஸ்தீன போரை மூன்றாம் உலகப்போராக மாற்றி விடுமோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. 

 

ஏற்கனவே பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக  காஸாவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் இஸ்ரேல் ராணுவத்தை ஈரான் எச்சரித்தது. ஆனால் அதை இஸ்ரேல் பொருட்படுத்தாத நிலையில், ஈரான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தனது படைகளை அனுப்பி வைத்தது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் உள்ள ஹெஸ்புல்லா இயக்கமும்  இந்த போரில் களமிறங்கி உள்ளது. 

 

லெபனானில் இருந்து இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஹெஸ்புல்லா என்ற இந்த அமைப்பானது இதற்கு முன்பு சிரியா மற்றும் லெபனான் போர்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக போரில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபடுவதால் இவர்களுக்கான நிதி ஆதாரத்தை ஈரான் பார்த்துக் கொள்வதாக  சொல்லப்படுகிறது.

 

ஹெஸ்புல்லா இயக்கத்திற்கான நிதி  மற்றும் ஆயுத உதவிகளை ஈரான்  செய்வது அமெரிக்காவிற்கு ஈரான் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி  இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஈரானின் சுப்ரீம் லீடர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிட கடமைப்பட்டுள்ளோம். இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுத குழு நடத்திய தாக்குதலில் சிலர் ஈரானையும் தொடர்பு படுத்தி பேசி வருகிறார்கள். அந்த தாக்குதலில் நாங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றாலும் அந்த தாக்குதலை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இஸ்ரேல் இந்த தாக்குதலில் இருந்து மீண்டு வர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அப்படியே மீண்டு வரும் என்றாலும் அதற்கு நீண்ட காலம் ஆகலாம். அந்த அளவுக்கு துணிச்சல் மிக்க தாக்குதலை நடத்தி இருக்கும் ஹமாஸ் குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள். அவர்களுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்து இருக்கிறார்.

 

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தற்போது தொடர்ந்து 15 வது நாளாக நடந்து வரும் நிலையில், இதுவரைக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா ரஷ்யாவின் அந்த தீர்மானத்தை தோல்வியுற செய்தது. மேலும் உலகம் முழுவதும் இருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கு ரஷ்யா ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா முன் வைத்தது. அதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா, மேற்குலக  நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தி  வருகின்றன. அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு அமைப்பை அவர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்று நினைக்கின்றன”  என்று அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியது.

 

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நேரடியான கருத்து யுத்தம் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேலின் காசா மருத்துமனை மீதான தாக்குதல் ரஷ்யாவை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கவேண்டும் என்று ரஷ்யா  தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் சீனாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனா சென்ற ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜிங் பிங்குடன்  30 நிமிடங்களுக்கு மேல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புடின் எடுத்து சென்ற ஒரு சூட்கேஸ் பற்றி தற்போது பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக அந்த சூட்கேசில் அணு ஆயுதம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படி இஸ்ரேல் பாலஸ்தீன போரில் ஈரான் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின்  பங்களிப்புகள்  அந்த போரை ஓர் சர்வதேச போராக மாற்றிவிடுமோ என்கிற அச்சம் தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. மனித குல அழிவை ஏற்படுத்தும் இதுபோன்ற போர்கள் இனியும் தேவையா என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள்தான் சிந்திக்க வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்