
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றது. அதே சமயம் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற்றது. அந்த வகையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் இன்று (09.03.2025) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை குவித்தது.
அதாவது நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்களும், ரச்சின் ரவிந்தரா 29 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சமி, ரவிந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர். இந்திய அணிக்கு 252 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது.
இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இத்தகைய சூழலில் தான் 49 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். மேலும் ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். கே.எல். ராகுல் 33 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்களை எடுத்தார். சுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனை கிரிகெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,முமமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்துவீரர் ரச்சின் ரவிந்தராவுக்கும், ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் மூன்று முறை கோப்பையை வென்ற ஒரே அணியாக இந்திய அணி உருவாகியுள்ளது. இந்த கிரிக்கெட் வரலாற்றை உருவாக்கியதற்காக வீரர்கள், நிர்வாகம் மற்றும் துணை ஊழியர்களுக்கு மிக உயர்ந்த பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு விதிவிலக்கான விளையாட்டு மற்றும் ஒரு விதிவிலக்கான முடிவு ஆகும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவிற்குக் கொண்டு வந்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியை நினைத்துப் பெருமைப்படுகிறோம். அவர்கள் போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். அற்புதமான அனைத்து காட்சிக்காக இந்திய கிரிக்கெட் குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதே போன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு நல்ல தொடக்கம். ஒரு சரியான முடிவு ஆகும். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கும், வலுவான போட்டியைக் கொடுத்த நியூசிலாந்து அணிக்கும் வாழ்த்துக்கள். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், அவரது அணியினருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பாகச் செயல்பட்டு, இறுதிப் போட்டியில், போற்றத்தக்க வெற்றியையும் பெற்றுள்ளீர்கள். மீண்டும் ஒரு முறை சாம்பியன் ஆகியுள்ளீர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் தொடர் முழுவதும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியின் நிலையான ஆல்ரவுண்ட் செயல்திறன் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்குச் சிறப்புப் பாராட்டுக்கள். அவரது சுழற்பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. நமது இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற பயணம் தொடர்ந்து பிரகாசிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.