ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், பொதுமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த போர்நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 5 ஆம் தேதி மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்த முடிவை ரஷ்யா எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.