
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தயார் தயாளு அம்மாள் ஆவார். இவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த வாரம் (03.03.2025) மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அன்றைய தினமே மருத்துவமனைக்கு விரைந்து சென்று தாயாரிடம் நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி தயாளு அம்மாளின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி நேரில் சென்று நலம் விசாரித்தார். அதோடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் சென்று சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.
அதே சமயம் தயாளு அம்மாளின் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் நலம் விசாரித்தனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயார் தயாளு அம்மாள் இன்று (09.03.2025) வீடு திரும்பினார். ஒரு வாரக் கால சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து தயாளு அம்மாள் வீடு திரும்பினார்.