பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஜனவரி 20 ஆம் தேதி பைடன் அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் சூழலில், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
அந்தவகையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த வழக்கை மாகாண நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்த பென்சில்வேனியா ஆளுநர் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப் தரப்பு பென்சில்வேனியா தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூன்று பேர் ட்ரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் எந்தவித விளக்கமும் இன்றி “தடை உத்தரவு கோரி பிறப்பிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என ஒற்றை வரியில் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.