அமெரிக்காவில் அலபாமா நகரம் அருகே எலக்மன்ட் பகுதியை சேர்ந்த 14- வயது சிறுவன் ஒருவன், வீட்டில் தனது குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனால் சுடப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் உடனடியாக தான் கொலை செய்த தகவலை தொலைபேசி மூலம் காவல்துறைக்கு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த தந்தை, தாய், சகோதரர், சகோதரி உள்ளிட்ட ஐந்து பேரை சிறுவன் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெரும் சமூக அவலமாக மாறி வருகிறது. அதனால் தான் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தனது கடைகளில் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையை நிறுத்திக்கொள்ளப்போவதாக பிரபல "வால்மார்ட் நிறுவனம்" அறிவித்துள்ளது.