பெண் ஒருவர் குடும்பத்தாரின் கட்டுப்பாடுகளை மீறி வேலைக்குச் சென்றதால் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் காஸ்னி பகுதியில் வசித்து வருபவர் கடேரா (33). சிறுவயது முதலே காவலராக வேண்டும் என்ற கனவோடு பல்வேறு எதிர்ப்புகளை மீறி படித்த இவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன்னர் காஸ்னி காவல்நிலையத்தில் காவலராக பணி கிடைத்துள்ளது. தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கடந்த மூன்று மாதங்களாக பணிக்கு சென்று வந்துள்ளார் கடேரா. ஆனால், இவர் பணிக்குச் செல்ல இவரது சுற்றத்தார் மற்றும் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த சூழலில், ஒருநாள் பணியை முடித்துவிட்டு காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்த கடேரா மீது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டும், கத்தியினால் கண்களில் குத்தியும் கடேராவை அவர்கள் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்த கடேரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் காரணமாக அவர் உயிர்பிழைத்தாலும், அவரது கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலை தாலிபான் அமைப்பினர் செய்ததாக சிலரும், மகள் பணிக்குச் செல்வதை விரும்பாத அவரது தந்தைதான் இதனைச் செய்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இது குறித்து அந்நாட்டு போலீஸார் தீவிரமாக விசாரித்து வரும் சூழலில், தன்னுடைய பார்வையோடு சேர்த்து ஒட்டுமொத்த கனவும் பறிபோனதாகக் கதறி அழும் கடேரா, ஒருவேளை தனக்கு பார்வை திரும்பக் கிடைத்தால் மீண்டும் தன்னுடைய கனவுப்பணியை தொடர்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.