கொடுங்கோலர்களைவிட கொடூரமான கரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. சனிக்கிழமையன்று கரோனாவுக்கான முதல் உயிர்ப்பலியை எதிர்கொண்டது இலங்கை. தலைநகர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நோயாளி மரணமடைந்தார். அவருக்கு நீரிழிவு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்கனவே இருந்ததை சுட்டிக்காட்டுகிறது மருத்துவ அறிக்கை.
ஞாயிறு வரை அங்கே 113 கரோனோ நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் 4 பேர் அண்மையில் சென்னையிலிருந்து திரும்பியவர்கள். கரோனா பரவுதலில் சென்னை அதிகபட்ச ஆபத்துள்ள பகுதி என இலங்கையின் சுகாதாரத்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பும் பிற நகரங்களும் சுற்றுலா மையங்களாக்கப்பட்டு, பல நாட்டவரின் வருகையால் வருமானம் பார்க்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் மார்ச் 17ந் தேதி முதல் இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.
இந்தியாவுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட இலங்கையில், மக்களின் நடமாட்டமும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான நேரம் என்பது மிக குறைவாகவே உள்ளது. அவரவர் தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய வருவார்கள். அப்போது வாங்கிக் கொள்ள வேண்டும். அவசரத் தேவை என்றால், குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட வணிகருக்குத் தெரிவித்து, உரிய வீட்டுக்கு பொருள் விநியோகிக்கப்படும். நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிக விலைக்குப் பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.
நல்ல விஷயங்களை எல்லாம் தங்களின் நிர்வாகத் திறமை எனக் காட்டிக்கொள்ளும் இலங்கை, கொரோனா பலிக்கு சென்னை மீது பழி போடுவது சரியா?