Skip to main content

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

சார்ந்த செய்திகள்