கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் வாயிலாக சுமார் 44,856 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகின்றன. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும் மேட்டூரில் இருந்து சரிவர நீர்வரத்து இல்லாததாலும் கீழணையில் இருந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு சரிவர அனுப்பப்படவில்லை. இதனால் கோடைகாலத்தில் வறண்டது. இந்நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை போக்குவதற்காக தமிழக அரசு வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.
அதனடிப்படையில் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு கடந்த 17ஆம் தேதி முதல் வினாடிக்கு 2000 கன அடிவீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் 25 ஆம் தேதி சனிக்கிழமை காலை வந்தடைந்தது .இந்த தண்ணீர் தேக்கப்பட்டு தற்போது வடவாறு வழியாக வினாடிக்கு 200 கனஅடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் பட்சத்தில் வீராணம் ஏரி 10 தினங்களுக்குள் பாதி அளவு நிரம்பும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.