ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். தமிழக அரசின் மனுவை நிராகரித்த அவர், மாநில அரசின் கோரிக்கையோடு மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 4 மாதங்களில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனாலும், இரண்டும் உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் அதிருப்பதி தெரிவித்து வந்த நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்..
இந்நிலையில், இன்று சாந்தனின் தாயார் இலங்கையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் என்ற அதிர்ச்சி செய்தியை கேட்டு மனமுடைந்துள்ளேன்.
இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கவில்லை. கட்டாயம் என் மகன் வருவான் என்ற நம்பிக்கையில் 27 வருடங்கள் காத்திருந்தேன். ஆனால் மத்திய அரசு அளித்த அதிர்ச்சியால் இனி நான் ஏன் உயிர் வாழவேண்டும் என தோன்றுகிறது. நீங்கள் யோசித்து பாருங்கள், உங்களுக்கும் என்னை போன்ற ஒரு தாய் இருப்பார். உங்களை பிரிந்து உங்கள் தாயால் எப்படி 27 வருடம் இருக்க முடியும்?
இனி மேலும் இது போன்ற அதிர்ச்சி செய்திகள் வந்தால் என்னை இனி யாரும் பார்க்க முடியாது. இப்படி ஒரு நிலை இனி எந்த தாய்க்கும் வந்து விடக்கூடாது. உங்களிடம் கைகூப்பி பிச்சையாக கேட்கிறேன் என் பிள்ளையை என்னிடம் தாருங்கள். என் பிள்ளையை பார்க்க வையுங்கள் என அவர் கண்ணீருடன் கூறினார்.