தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆதீன சொத்துக்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தூத்துக்குடி செங்கோல் ஆதினத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்களில் வந்த வருமானங்களைக் கொண்டு, சமய பணிகளையும், தொண்டுகளையும் செய்து வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இந்த பணிகள் முறையாக செய்யப்படாத நிலையில், ஆதினத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கோவிலுக்குள் வருமானம் இல்லாமல் போனதும், அதனால் பணிகள் தடை பட்டதும் தெரியவந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து செங்கோல் ஆதினத்துக்கு சொந்தமான நிலங்களை அளக்கவும்,என உத்தரவிடப்பட்டது ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" என் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி துரைச்சாமி,நீதிபதி சுந்தர் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்த போது மனுதாரர், தமிழகம் முழுவதும் இது போன்ற ஆதீன மடங்களுக்கு சொந்தமான 55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவை முறையாக பராமரிக்கப்படாமல் அவற்றின் வருமானம் குறித்த விபரங்கள் தெரியாத நிலையில், போதிய வருவாயின்றி பல ஆதீன மடங்களில் நித்யகால பூஜைகள் கூட நடைபெறுவதில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களும், ஆதீன சொத்துக்கள் குறித்த விபரங்களை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.