Skip to main content

கும்பகோணத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை;  திரளாக வந்திருந்த இஸ்லாமியர்கள்

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

கும்பகோணம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கமும் இணைந்து பக்ரீத்  பெருநாள் தொழுகையை கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில்  நடத்தினர்.

 

p

 

தொழுகைக்கு முன்னதாக சிறப்பு சொற்பொழிவில் இமாம் ஹஜிஸ் தியாக திருநாளைப் பற்றி பேசினார், "இறைத் தூதர்களில் ஒருவர்  இப்ராஹிம்.  இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை.  இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயீல் என்று பெயர் சூட்டினர். 

 

இஸ்மாயீலுக்கு 13 வயது ஆன போது ஒரு நாள் இப்ராஹிமின் கனவில் இறைவன்  வந்துள்ளார். அப்போது இஸ்மாயீலை தனக்கு பலி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.  இதுகுறித்து தனது மகனிடம் கூறி  இப்ராஹிம் பலியிடத்தொடங்கினார். இவரின் அளவற்ற இறை நம்பிக்கையை எண்ணிய இறைவன் ஆச்சரியமடைந்தார். தூதரை அனுப்பி, இப்ராஹிமின் செயலை இறைவன் தடுத்துள்ளார். அதோடு ஒரு ஆட்டை அளித்து, அதனை இஸ்மாயீலுக்கு பதிலாக பலியிடுமாறு கட்டளை இட்டுள்ளார். எனவே இப்ராஹிமின் தியாக உணர்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பெருநாளை தியாக திருநாளாக  கொண்டாடப்படுகிறது. 

 

இந்த இறைச்சியை மூன்றாகப் பிரித்து உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் ஏழைகளுக்கு அளித்துவிட்டு மற்றொரு பங்கை இஸ்லாமியர்கள் தாங்களே எடுத்துக்கொள்கின்றனர். சிறப்பு உணவுகளாக தயாரிக்கப்பட்டு பிறருக்கு பகிர்ந்து அளித்து தாங்களும்  மகிழ்கின்றனர்." என்று பக்ரீத் பெருநாள் வரலாற்றைக்கூறினார்.

 

பிறகு சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையில் பெரியவர்கள் சிறியவர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காக பிராத்தனை செய்தனர்.புதிய ஆடை உடுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் தழுவி தியாக திருநாளில் வாழ்த்துகளை பரிமாறி கொண்டாடினர்.

 

அது போல் மேலக்காவேரி சோழபுரம் ஆவணியாபுரம் திருப்பனந்தாள் தத்துவாஞ்சேரி திருமங்கலக்குடி போன்ற பகுதிகளில் ஜமாத்தார்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகளும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்