![''Play the audio... Let them know...''- Sengottaiyan on stage](http://image.nakkheeran.in/cdn/farfuture/-kKy0ESyBRpwcmEaQ-4xku_jQ8utx7KwLEMy1m3ZeK0/1739376631/sites/default/files/inline-images/a2529.jpg)
எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருக்கும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் இன்று (12/02/2025) நடந்த எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கிய போது பல்வேறு சோதனைகள் இருந்தது. இன்று பிறந்தநாள் காணுகிறோம் என்று சொன்னால் அந்த தலைவனுக்கு வந்த சோதனை எந்த தலைவருக்கும் வந்திருக்காது. நான் எத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எத்தனை தலைவர்களை சந்தித்து விட்டு இந்த களத்தில் நிற்கிறேன் என்பதும் மக்களுக்கு தெரியும். வந்திருப்பவர்கள் ஏதாவது கிடைக்குமா என நினைக்கிறீர்கள். கிடைக்காது. கவலைப்பட தேவையில்லை. நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாதை. எனது வழி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவும் காட்டிய வழிதான். அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் நின்று பேசி இருக்க இயலாது.
1972ல் அதிமுக தொடங்கப்பட்ட போது நான் சாதாரண தொண்டன்.1975-ல் பொதுக்குழு நடத்த வேண்டும் என எம்ஜிஆர் உத்தரவு வழங்கினார். அதில் அரங்கநாயகம் தலைவர், மணிமாறன் செயலாளர், நான் அதற்கு பொருளாளர். அன்றைக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்தது. சினிமா படம் கூட எடுக்க முடியவில்லை. தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் எம்ஜிஆர் எங்களை அழைத்தார். எங்கள் மூன்று பேரையும் அழைத்து பொதுக்குழுவை நடத்துங்கள் என்று சொன்னார். எங்களோடு 16 பேர் வந்தார்கள். பொதுக்குழுவை நாங்கள் சிறப்பான முறையில் நடத்திக் காட்டினோம். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் இன்றைக்கு இருப்பதைப் போல அன்றைக்கு இல்லை. நாங்கலெல்லாம் எதிர்க்கட்சி, சாதாரண ஆட்கள். இன்று எந்த கூட்டத்தை வேண்டுமானாலும் நடத்த முடியும். அன்று அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை.
அதனைத் தொடர்ந்து 1977 தேர்தல் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் களத்தில் நின்றேன். எனக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கொடுக்கும் பொழுது 'நீ சத்தியமங்கலத்தில் நிற்கப் போகிறாய்' என்று சொன்னார். என்னை கொண்டு போய் சத்தியமங்கலத்தில் விடுகிறீர்களே அது மைசூரைச் சேர்ந்த பகுதி. காங்கிரஸ் ஓட்டுகள் இருக்கும் இடம் என்று சொன்னேன். ஒரே வரி தான் சொன்னார் 'எம்ஜிஆர்' என்று சொல் நீ வெற்றி பெறுவாய் என்று சொன்னார். வெற்றி பெற்று காட்டினோம். எல்லோரும் நினைக்கிறார்கள் நான் சொன்னது இரண்டே வரிதான் ''ஜெயலலிதாவின் எம்ஜிஆர் படம் இல்லை'' என்று சொன்னேன். அதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நான் புறக்கணிக்கவில்லை அவர்களுடைய படங்கள் இல்லை என்பதால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்கிறேன். நான் இப்பொழுது நிற்கிறேன் என்று சொன்னால் அதற்கு வித்திட்டவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தான்''என்றார்.
தொடர்ந்து செங்கோட்டையன் குறித்து ஜெயலலிதா பாராட்டி பேசிய ஆடியோவையும் அவர் மைக்கில் ஒலிக்க விட்டார். அதை ஒலிபரப்புவதற்கு முன்பு ''எனக்காகவும் இந்த இயக்கத்திற்காகவும் சறுக்காமல் வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவர் செங்கோட்டையன்'' என்று ஜெயலலிதா என்னை பற்றி பேசி உள்ளார். கேசட் யாராவது கொண்டு வந்திருக்கிறீர்களா? ரெக்கார்ட் இருக்கா? போடுங்க தெரிஞ்சுக்கட்டும். ஏனென்றால் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்'' என சூசமாக பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜெயலலிதா தன்னை பற்றி பேசிய ஆடியோவை ஒலிபரப்பினார். அதில் ''சிறு சறுக்களுக்கோ வழுக்களுக்கோ இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவராக இருந்ததால் தான் இன்று இத்தனை சிறப்புகளை பெற்று விளங்குகிறார் அன்பு சகோதரர் செங்கோட்டையன்'' என ஜெயலலிதா பேசும் ஆடியோ வெளியிடப்பட்டது.