தமிழராய் ஒன்றிணைவோம் என தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1, தமிழ்நாடு தினம். இந்தாண்டு தமிழ்நாடு தினத்தை தமிழக அரசாங்கத்தின் சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு தினத்தை அரசாங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாட வேண்டுமென்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு தினத்தை கொண்டாடுவதன் மூலம் தான் சாதி மத அரசியல் வேறுபாடுகளை கடந்து தமிழர்களாக அனைவரும் ஒற்றுமைப்பட முடியும்.
இந்த ஒற்றுமைதான் தமிழுக்கும், தமிழனுக்கும் ஒரு ஆபத்து என்றால் மொத்த தமிழகமும் ஒருசேர குரல் எழுப்புவதற்கும், போராடுவதற்குமான வாய்ப்பினை உருவாக்கும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் உரிமையை கேட்டு பெறுவதற்கும் இது உதவும். அதேபோல தமிழர்களின் கோரிக்கையான தமிழகத்திற்கு என்று தனிக்கொடியை தமிழக அரசு உருவாக்கி அடுத்தாண்டு தமிழ்நாடு தினத்தில் அறிமுகப்படுத்திட தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இப்படி தமிழக அரசால் உருவாக்கப்படும் தனிக்கொடியானது தமிழ்நாடு தினத்தில் எல்லா அரசியல் கட்சி கொடிகளையும் தவிர்த்து தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறக்க வேண்டும். இதுதான் தமிழகத்தின் ஒற்றுமையை உலகளவில் வெளிக்காட்ட கூடியதாக இருக்கும்.
தமிழனை ஒற்றுமைப்படுத்த முடியாது என்ற எண்ணத்தை உடைக்கும். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு தினத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்போம். இந்த முறை தமிழக அரசாங்கத்தினுடைய வாழ்த்துகளோடு சேர்ந்து தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.