ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி சாலையோரம் வருவதும் கிராமத்துக்குள் புகுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மிக குறுகிய சாலையான மலைப்பாதையில் நேற்று இரவு 7 மணி அளவில் குட்டியுடன் தாய் யானை நின்று உணவு தேடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு, தங்களது செல்போனில் யானையைப் படம் பிடிக்க ஆரம்பித்தனர். யானை சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்க முடியவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து யானை மலைப்பாதை நோக்கி மேலே ஏறியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை மெதுவாக இயக்கினர்.
காட்டு யானை குட்டியுடன் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டியுடன் இருக்கும் தாய் யானைக்கு அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது. குட்டியுடன் யானைகளைக் கண்டால் வெகு தூரத்திலேயே வண்டியை நிறுத்தி விடுங்கள் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.