இன்று விருதுநகர் மாவட்ட தமுமுக தலைமையில், ‘டிசம்பர் 6 – பாசிச எதிர்ப்பு நாள்’ என்ற பெயரில், கருஞ்சட்டை அணிந்து, சிவகாசியில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினார்கள்.
பாபரி மஸ்திதை இடித்த பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம்!
மஸ்திதை இடித்த காவிகளே!
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்த பாவிகளே!
தேச ஒற்றுமையைக் குலைக்காதீர்!
நாங்கள் பிறந்து வளர்ந்த பூமியிலே,
மாமன் – மச்சான் உறவுகளோடு,
அனைத்து மக்களின் துணையோடு,
ஜனநாயகம் காத்திட, நல்லிணக்கம் வளர்த்திட,
மனிதநேயம் பேணிட உரிமைக்குரல் எழுப்புகிறோம்!
ஆறாது.. ஆறாது.. டிசம்பர் ஆறு ஆறாது!
தீராது.. தீராது.. நீதியின் தாகம் தீராது!
-ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்ட கோஷங்கள் இவை!
ஆர்ப்பாட்ட மேடையில் மைக் பிடித்த தமுமுக பேச்சாளர் காதர் பாட்ஷா –
“இந்தியா – பாகிஸ்தான் கலவரத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். நேருவால் அடக்க முடியவில்லை. சர்தார் வல்லபபாய் படேலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தநிலையில் மகாத்மா காந்தி, ‘கலவரம் நிற்கும் வரை, நான் சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால்தான் நான் உண்ணாவிரதத்தை முடிப்பேன்.’ என்றார். காந்தியின் இந்த அறிவிப்பைக் கேட்ட சங்பரிவார் கும்பலுக்கு அப்படி ஒரு வேகம் வந்தது. நாம் ஒற்றுமையைக் குலைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். காந்தியோ இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தப் பார்க்கிறார். இவர் இருக்கும் வரையிலும் நம் திட்டம் நிறைவேறாது என்று முடிவெடுத்தனர்.
நமக்கெல்லாம் காந்தியை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தியாகியாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஒரு இந்து ஆன்மிகவாதி. மிகச்சிறந்த ஞானி. ஒரு சாமியாரைப் போன்றவர். இந்து மதத்தின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். சிறந்த ஆன்மிகவாதியான இந்திய தேசத்தின் தந்தையை, இந்த இந்துத்வா தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். ஏன் தெரியுமா? காந்தி ஒற்றுமை ஒற்றுமை என்று பேசிக்கொண்டிருப்பார். நம் திட்டமோ கலவரம் உண்டாக்க வேண்டும் என்பது. அதற்கு இவர் சரிவர மாட்டார் என்று அவர்கள் திட்டமிட்டதே! பின்னாளில் இவர்கள் கலவரத்துக்காகக் கையிலெடுத்த விஷயம்தான் பாபர் மசூதி. இந்துக்களையும் முஸ்லிம்களையும் துண்டாட வேண்டும். கலவரத்தை உண்டாக்கி, அதன்மூலம் ஓட்டு வேட்டை நடத்த வேண்டும் என்பதுதான் சங்பரிவார்களின் திட்டம். அப்படி கலவரம் நடத்தியதால்தான் இன்றைக்கு நரேந்திரமோடி மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். உ.பி.யில் கலவரம் நடத்தினர்; பொய்களைப் பரப்பினர்; ஆட்சிக்கும் வந்தனர். ஆட்சியைப் பிடிப்பதற்கான இவர்களின் ஆயுதங்களில் ஒன்று கலவரம்; இன்னொன்று பொய்.” என்று காரசாரமாகப் பேசினார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.