வடதமிழகத்தில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சிக்கி தவிக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிநீர் குழாய்கள் மூலமாக சப்ளை செய்து மாதக்கணக்கில் ஆகிறதாம். இதனால் பல கிராமங்கள் சாலை மறியல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முற்றுகை என செய்துள்ளனர். அப்போதெல்லாம் போராடிய மக்களை சமாதானம் செய்தே காவல்துறை அனுப்பிவந்தது.
மக்களும், தண்ணீர் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில், கலைந்து சென்றனர். தண்ணீர் வந்தபாடில்லை. இதனால் மக்கள் கொதித்துப்போய்வுள்ளனர். குடிதண்ணீர் பிரச்சனையைகூட சரி செய்ய முடியாத அரசாங்கமாக அதிமுக அரசாங்கம் உள்ளதாக குற்றச்சாட்டி வருகின்றனர் பொதுமக்கள்.
இந்நிலையில் ஆம்பூர் நகரம் அம்பேத்கர் நகர் மக்கள், குடிநீர் வழங்கவில்லையென சாலைமறியல் செய்தனர். வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமையில் இந்த மறியல் ஆம்பூர் – பேரணாம்பட்டு சாலையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துக்கொண்டனர்.
அனுமதியில்லாமல் கூடி போராட்டம் நடத்தியதாக ஐ.பி.சி 143, 341 பிரிவுகளின்கீழ் 40 ஆண்கள், 20 பெண்கள் மீது ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலிஸார் வழக்குபதிவு செய்துள்ளது, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை தேவையான குடிநீரை தராத அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியவர்கள், மக்களை எதையும் கேட்காதே எனச்சொல்வது என்ன நியாயம், நாங்கள் வாழ்வதா அல்லது சாவதா என கேள்வி எழுப்புகின்றனர்.