‘அமமுக பக்கம் சாய்ந்த எம்.எல்.ஏ. எஸ்.ஜி.சுப்பிரமணியனின் பச்சைத் துரோகத்தால்தான், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, சாத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.ஜி. சுப்பிரமணியனின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டதே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிதான். சுயநலத்தால் அதைச் சுத்தமாக மறந்து, அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கும் ராஜவர்மனுக்கு எதிராக அமமுக வேட்பாளராகக் களம் காணவிருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.வும். அமமுக மா.செ.வுமான எஸ்.ஜி.சுப்பிரமணியன்..’ என்று நறநறத்தபடி வரிந்து கட்டுகிறார்கள் அதிமுகவினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியனுக்கே வாய்ப்பு என்று அமமுக தரப்பில் உறுதியாகச் சொன்னாலும், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரியின் கணவர் முத்துராஜ், ‘நானும் இருக்கிறேன்’ என்று வேட்பாளர் கனவை வெளிப்படுத்தி வருகிறார். டிடிவி தினகரனோ, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் முன்னுரிமை என்பதில் உறுதியாக இருக்கிறார். அமமுகவினரோ ‘நாங்கள் செய்தது துரோகம் அல்ல; ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர நினைத்தோம். அதனால்தான், தகுதி நீக்கம் செய்யப்பட்டோம். நியாயமாகப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் செய்ததுதான் பச்சைத் துரோகம். அவர் அங்குதானே இருக்கிறார்? எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும்தான் துரோகிகள்.’ என்று அதிமுக தொண்டர்களுக்கு தேர்தல் களத்தில் புரியவைப்போம் என்கிறார்கள்.
கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருக்கும் கெட்டிக்கார அரசியல்வாதி ராஜவர்மன் என்றாலும், தொகுதியிலுள்ள அதிமுகவினருக்கு, அவர் துரைப்பாண்டியாக இருந்த காலத்திலிருந்தே நன்றாகத் தெரியும். அதேநேரத்தில், தொகுதி மக்களுக்கும் ராஜவர்மனுக்கும் ரொம்பவே தூரம். அமைச்சரின் ஆசியாலும், ஆட்சி அதிகாரத்தாலும், பணபலத்தாலும் தெம்பான வேட்பாளராக இருக்கிறார் ராஜவர்மன். உளவுத்துறை அளிக்கும் தகவலால், ஒருவேளை ராஜவர்மனுக்கு வாய்ப்பு இல்லையென்றால், ‘நெக்ஸ்ட் சாய்ஸ்’ ஆக இருக்கிறார் வழக்கறிஞரும் அம்மா பேரவை நிர்வாகியுமான சேதுராமானுஜம். ‘கட்சியினருக்கு டீ கூட வாங்கித் தரமாட்டார்‘ என, இவருடைய சிக்கனம் குறித்து சீரியஸாகப் பேசுகிறார்கள் ர.ர.க்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4,427 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார், இந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்படும் ஸ்ரீனிவாசன். சென்னை, ஹைதராபாத் என கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இவருக்குப் பணமெல்லாம் தண்ணி பட்டபாடு. தொகுதியில் பணத்தை வாரியிறைப்பதற்குத் துடியாய்த் துடிக்கிறார். கடந்த மாதம் சாத்தூரில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட, மாநாடு அளவுக்கு பிரம்மாண்டம் காட்டிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாசனே முன்னின்று செய்தார்.
கடந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என திமுக தரப்பில் சொல்வது என்னவென்றால், அங்கங்கே தன்னுடைய ஆட்களைக் களத்தில் இறக்கி செலவு விஷயங்களைப் பார்த்துக்கொண்டது, தொகுதியில் ஸ்ரீனிவாசன் மலைபோல் நம்பிய உறவினர் மீதான பொதுவான அதிருப்தி போன்றவைதான், சில ஏரியாக்களில் வாக்குகளை இழக்கச் செய்தன. இந்த அளவுக்குச் செலவழிக்கக்கூடிய வேட்பாளர் திமுகவுக்கு கிடைத்திருப்பது அதிமுகவினரையே பொறாமை கொள்ள வைத்திருக்கிறது. ‘என்ன இருந்தாலும் ஸ்ரீனிவாசன் உள்ளூர் கிடையாது. சொந்தவீடுகூட சாத்தூர் தொகுதியில் இல்லை. தொழிலுக்காக ஆந்திரா போய்விடுவார். வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகிவிட்டால், சென்னைக்கும் ஹைதரபாத்துக்கும் போனால்தான் பார்க்கமுடியும்.’ என்கிற ரீதியிலான விமர்சனம் ஸ்ரீனிவாசனின் பலவீனம்.
தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளை ஆளாளுக்குப் பிரிக்கும் நிலையில், பிற சமுதாய மக்களின் ஆதரவைப் பெறுவதுதான் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருக்கிறது. பிரதான தொழிலான தீப்பெட்டித் தொழில், இயந்திரமயமான பிறகு நசிந்துபோனது, மாற்றாக உள்ள பட்டாசுத் தொழிலும் அழியும் அபாயத்தில் இருப்பது, ரூ.38 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் என இத்தொகுதியில் பிரச்சனைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
‘ஏழைப்பங்காளர்’ காமராஜரை இரண்டு தடவை எம்.எல்.ஏ. ஆக்கிய சாத்தூர் தொகுதியில், தற்போது வேட்பாளர் ஆவதற்கான தகுதி பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறது.