வீரகனூர் அருகே, அதிமுக முன்னாள் பிரமுகரின் வீட்டில் 1.25 கோடி மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாஜி அதிமுக பிரமுகள் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே ராயர்பாளையத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிகருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்பியின் உத்தரவின்பேரில் ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில் காவல்துறையினர் புகாருக்குள்ளான வீட்டை நெருங்கினர். அப்போது மூன்று மர்ம நபர்கள், ஒரு லாரியில் இருந்து போதைப் பொருள்களை இறக்கிச்சென்று வீட்டுக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினர் நெருங்கியதை அறிந்த அவர்கள் தப்பிக்க முயன்றனர். அதில் இரண்டு பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், ஆத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தாராம் (34), அஜிஜாராம் (28) என்பதும் தெரிய வந்தது. இவர்களின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம் என்பதும் தெரிய வந்தது.
மேலும், போதைப் பொருள்களை பதுக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வீடு, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமாரசாமி என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாக மளிகை பொருள்களை இறக்கி வைப்பதுபோல் குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருள்களை அந்த வீட்டுக்குள் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவனுக்கு, காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். அவருடைய உத்தரவின்பேரில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் லாரியில் இருந்த 40 மூட்டை போதை பொருள்களையும், வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மூட்டை போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இவை மட்டுமின்றி வீட்டின் மற்றொரு பகுதியில் 100 பெட்டிகளில் குட்கா பவுடரை அடைத்து வைத்திருந்தனர். அந்த பெட்டிகள் ஒவ்வொன்றிலும் தலா 5 கிராம் எடையிலான வெள்ளி காசுகளும் இருந்தன. 100 பெட்டிகளில் இருந்து மொத்தம் அரை கிலோ வெள்ளி காசுகள் கைப்பற்றப்பட்டன.
அதிமுக முன்னாள் பிரமுகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் சந்தை மதிப்பு 1.25 கோடி ஆகும். அப்பொருள்களை அதிகாரிகள், வீரகனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து அதிமுக முன்னாள் பிரமுகர் குமாரசாமி, குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஜெயந்தாராம், அஜிஜாராம், லாரி ஓட்டுநர் சுரேஷ் உள்பட ஐந்து பேர் மீதும் வீரகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஜெயந்தாராம், அஜிஜாராம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். லாரி, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.