சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர். முருகன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன என்றும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் அளித்த உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல்ராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முருகனும், அர்ஜுனனும் அடுத்தடுத்த பகுதியில் வசித்தவர்கள் என்பதால், ஒரே கும்பல் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. முருகனின் மனைவியிடம் விசாரித்தபோது, தனக்கு 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். தற்போது அந்த மூவரும் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கின்றனர்.
ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை இரண்டு குழந்தைகளுடன் கடத்தி வந்ததாக முருகன் குறித்தும், விபத்து ஒன்றில் கை முறிந்து சுமை தூக்கும் வேலையைப் பார்க்க முடியாத நிலையில் அர்ஜுனன் இருந்ததாகவும், அர்ஜுனன்தான் நேற்றிரவு முருகனை செல்போனில் அழைத்ததாகவும், இவ்விருவரும் ஒரேநேரத்தில் கொலை செய்யப்படும் அளவுக்கு யாரைப் பகைத்துக்கொண்டார்கள் எனவும் விசாரணை வேகமெடுத்துள்ளது. கொடுக்கல் வாங்கல் அல்லது பெண் விவகாரமாக இருக்கக்கூடும் என இருவிதமாக அலசப்படும் இந்தக் கொலை வழக்கில், நேருகாலனியின் பின்புறம் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படும் கடம்பன்குளம் கண்மாயில் கும்பலாக மது அருந்தியபோது தகராறு முற்றியதாகவும், அங்கேயே இருவரையும் கொலை செய்துவிட்டு, போதையின் உச்சத்தில் பிணங்களை வெவ்வேறு ஏரியாவில் மாற்றி போட்டுவிட்டதாகவும் விசாரணை தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.