![Vijaya Prabhakaran sheds tears on stage.](http://image.nakkheeran.in/cdn/farfuture/FCDNpqXyn1RYQEDIFHdFVTPi0JkgeFTkfjXyZ5VCv70/1635424996/sites/default/files/inline-images/th-1_2089.jpg)
தேமுதிக துவங்கப்பட்டு தமிழ்நாடு அரசியலில் ஓர் முக்கிய கட்சியாக வலம் வந்தது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி சட்டமன்ற எதிர்க் கட்சியாக இருந்தது. அதன்பிறகு 2016 தேர்தலில் அக்கட்சித் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டுத் தேர்தலைச் சந்தித்தது. அந்த கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு சிறிது காலத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அவர் அதிகப்படியாகப் பொதுவெளியில் வரமுடியாமல் போனது. அதேபோல் அவர், சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். தற்போது, விஜயகாந்தின் மனைவி பிரமேலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் மணப்பாறையில், அக்கட்சி நிர்வாகியின் திருமண விழா நடைபெற்றது. இதில், விஜய பிரபாகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப்பேசினார். அப்போது ஒரு கட்டத்தில், திடீரென கண் கலங்கிய விஜய பிரபாகரன், “அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாருங்க. ஆனால் குடும்பத்தைத் தொந்தரவு பண்ணக்கூடாது. என்னுடைய அப்பா நலமாக இருக்கிறார். அவரை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரைப்பற்றியும் எங்கள் குடும்பத்தைப் பற்றியும் வரும் தவறான செய்திகளால் எங்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டாகிறது” என்று கூறி மேடையிலேயே கண்கலங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.