கரோனா தொற்று ஊரடங்கால் உலக நாடுகளே அடங்கிக் கிடக்கிறது. இதனால் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதிலிருந்து குடும்பம் நடத்திய பல லட்சம் குடும்பங்கள் இன்று தவித்து வருகின்றனர். இந்த நிலையை அறிந்து அரசு உதவிகள் கிடைத்தாலும் அது அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
இந்தநிலையில்தான் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. திருநாவுக்கரசரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகில் உள்ள தீயத்தூர் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திருநாவுக்கரசர் எம்.பி.யை கௌரவத் தலைவராகக் கொண்டு தீயத்தூர் கிராம நலச் சங்கத்தை உருவாக்கினார்கள். இதில் ஏராளமான இளைஞர்களும் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர்.
கரோனா தொற்றால் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நிலைதடுமாறியுள்ள மக்கள் அத்தியாவசியப் பொருள் வாங்க 30 கி.மீ. சென்று வருவது சிரமமாக இருப்பதை அறிந்த கிராம நலச்சங்கத்தினர் தங்களின் சொந்தப்பணத்தில் ரூ. 60 ஆயிரம் வரை செலவிட்டு மொத்தமாக காய்கறிகள், முகக் கவசங்கள் வாங்கி வந்து கிராமத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து, பைகளில் அடைத்து வீட்டுக்கு வீடு சென்று வழங்கியுள்ளனர். சுமார் 180 வீடுகளுக்கு காய்கறி பைகளை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் ஒரு வாரத் தேவை பூர்த்தி அடைந்திருப்பதாகக் கூறுகிறார்கள் அந்தக் கிராம மக்கள். இன்னும் சேவைகள் செய்ய காத்திருக்கிறோம் என்கிறார்கள் தீயத்தூர் கிராம நலச் சங்கத்தினர். தீயத்தூரைப் போல ஏழைகளுக்கு கை கொடுப்பதை மற்ற கிராமங்களும் பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.