சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்து, 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. முன்னதாக ஞானசேகரன் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், அதை வைத்து பண்ணை வீட்டை வாங்கி அதில் வசித்து வந்ததோடு, இதேபோல் பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் தொலைபேசியில் யாரோ ஒருவரிடம் ‘சார்’ எனப் பேசியதை மீண்டும் மாணவி உறுதிப்படுத்திய கூறப்பட்டது. மாணவியை ‘மிரட்டிவிட்டு வந்து விடுகிறேன்’ என போனில் பேசியவரிடம் ஞானசேகரன் தெரிவித்ததாக விசாரணையில் மாணவி தெரிவித்தாகக் கூறப்பட்டது. அதேபோல் அடுத்த கட்டமாக ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்தில் பல்வேறு பெண்களின் ஆபாசப் படங்களும், திருப்பூரைச் சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் ஞானசேகரனுடன் இருக்கும் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகின்ற என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆதாரமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைதான ஞானசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை குறித்து பொது வெளியில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. வழக்கு விசாரணை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவோ, அதிகாரிகளோ தகவல் ஏதும் வெளியிடவில்லை. வெளியாகும் தகவல்கள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.
ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள் மக்களிடையே குழப்பதை விளைவிக்கும். சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக மாணவி கூறினார் என வெளியான தகவல் உண்மைக்கு மாறானது. ஆபாசப் பதிவு கொண்ட மின்னணு உபகரணம் பறிமுதல் என்ற தகவலும் ஆதாரமற்றது. திருப்பூரைச் சேர்ந்த நபர் எதிரியாக அடையாளம் காணப்பட்டார் என ஆதாரமற்ற தகவல் வெளியாகியுள்ளது. தவறான தகவல்கள் சம்பந்தப்பட்டோருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதாரமற்ற தகவல்களால் வழக்கின் சுதந்திரமான, நியாயமான விசாரணை பாதிக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.