கரோனா லாக்டவுண் காரணமாக, மார்ச் முதல் தற்போது வரை, சுமார் 9 மாதங்களாகத் தொடர்ந்து மூடப்பட்டிருக்கிறது குற்றாலம். சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கான அனுமதிக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து நின்று போனது. இதனால், அதனை நம்பியிருந்த வியாபாரம், லாட்ஜ், பொழுதுபோக்குத் துறை என்று பல தரப்புகளும் சுமார் 60 கோடிவரையிலான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. வேதனை நிலையிலிருக்கும் அவர்கள் பற்றிய செய்தியினை நக்கீரன் இணையதளம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
தற்போது அரசு, பல்வேறு தளர்வுளுடன் மக்களின் எண்டர்டெயின்மெண்ட் நகரமான ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் பகுதிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் குற்றாலத்திற்கு மட்டும் தடை நீடித்தது. இந்நிலையில், தற்போது குற்றாலத்தில், மழையால் பாதிக்கப்பட்ட தரைதளம், அருவிகளின் பக்கமுள்ள பயணிகளுக்கான அடிப்படை வசதிக் கட்டிடங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன. தென்காசி மாவட்டக் கலெக்டரான சமீரனும் அதனைப் பார்வையிட்டுள்ளார். செயலி மூலம் விண்ணப்பிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதிகுறித்து விவாதத்திற்குப் பின்பு அனுமதியளிக்கலாம் என்று வருவாய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நாம் மாவட்டக் கலெக்டரான சமீரனிடம் கேட்டதில், குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான அனுமதிக்கான ப்ராஸஸ்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அனுமதிக்குப் பின்பு பல கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் குளிப்பதற்கு விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை கலெக்டர் சமீரன், கரோனா பாதுகாப்பு விதிகளுடன் நாளை (15 அன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்றார்.