விழுப்புரம் நகரில் கடந்த 14ஆம் தேதி சலவைத் துணி இஸ்திரி போடும் தள்ளுவண்டியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரற்ற சடலமாக கிடந்தான். இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்குத் தகவல் அளிக்க, போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடலில் எந்தக் காயமும் இல்லை, உணவுக் குழாயில் உணவு எதுவும் தங்கியிருக்கவில்லை. அதனால் சிறுவன் பட்டினியால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தற்போது சலவை தள்ளுவண்டி நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீஸார் ஆய்வு செய்ததில், இரண்டு நபர்கள் விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள காளி கோவில் தெரு வழியாக சிறுவனை தூக்கிக்கொண்டு வந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சலவை வண்டியில் படுக்கவைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே அந்தச் சிறுவனை எங்கேயாவது கொலை செய்து இங்கு கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அல்லது சிறுவர்களைக் கடத்திச் சென்று பிச்சை எடுக்கவைக்கும் கும்பல் இந்தச் சிறுவனைக் கொண்டுவந்து சாப்பாடு கூட கொடுக்காமல் பிச்சை எடுக்க வைத்திருக்கலாம்; பசி மயக்கத்தில் சிறுவன் இறந்துபோனதால் அவனது உடலை சலவை செய்யும் தள்ளுவண்டியில் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தக் குழந்தை யார்? எப்படி இறந்தான்? எங்கிருந்து வந்தான்? அவனது தாய் தந்தை யார்? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.