Skip to main content

ஒரே மேடையில் வைகோ - நாஞ்சில்சம்பத்!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
nl

 

தமிழ்மொழி மற்றும் தமிழர் நலம் காக்கவும், தமிழை பயிற்று மொழியாக்கிடவும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும்  உள்ள தமிழ் அமைப்புக்களை இணைத்து ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில் உலகளாவிய தமிழியக்கம் தொடங்குவது சம்மந்தமாக   வேலூர் தமிழ்ச் சங்க தலைவரான விஐடி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் தமிழியக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, வேலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றன.

 

அதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழ் மற்றும் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள பாம்குரோவ்  ஓட்டல் கூட்ட அரங்கில் இன்று  2.6.18ந்தேதி மாலை நடைபெற்றது.

 

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வை.கோ, பழ.நெடுமாறன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வேலூர் தமிழ்ச் சங்க செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார், தமிழியக்கத்தின் பணிகள் பற்றி புலவர் பதுமனார் விளக்கி கூறினார்.

 

கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தரும் வேலூர் தமிழ்ச் சங்க தலைவருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு உள்ள பிரச்னைகளை நாம் அறிந்து அவற்றை போக்க குரல் கொடுக்க வேண்டும்.அதே போன்று உலக முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்காக கருத்தரங்குகள் மாநாடு நடத்துவதால் மட்டும் போதாது உலகில் உள்ள தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்.தமிழ் மொழியின் தாயகமான தமிழ் நாட்டில் தமிழை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.தமிழின் தொன்மை ,வளமை, பெருமை பற்றி அறியாமல் பலர் உள்ளனர். அவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழின் பெருமைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.

 

உலகில் 6900 மொழிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் பேசும் மொழிகளாக  30 மொழிகள் மட்டுமே உள்ளன, அதில் தமிழ் ,ஈபுரு ,சீன, லத்தின் என 7, 8 மொழிகள் மட்டுமே தொன்மை மொழிகளாக உள்ளன. பல மொழிகள் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து விட்டன.தமிழ் மொழி 5 ஆயிரம் ஆண்டுகள் தொண்மை வாய்ந்தது.சிந்து சமவெளி நாகரிகம் திராவிட மக்களால் உருவாக்கப்பட்டது. உலகில் 90 நாடுகளில் தமிழ் மொழி பேசுகின்றனர்.அதில் 30 நாடுகளில் கணிசமான அளவில் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.இலங்கை சிங்கப்பூர், மலேசியா, நாடுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசின் ஒத்துழைப்பு உள்ளது.ஆப்ரிக்க நாடான டர்பனில் 7 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.இவர்களால் தமிழ் மொழியில் பேச முடியவில்லை இது போன்ற நிலை பல நாடுகளில் உள்ளது.இவர்களுக்கு தமிழ் மொழியை கற்று தர வேண்டும்.அதற்கு ஏற்ற வகையில் வெளிநாடுகளுக்கான தமிழாசிரியர்களை நியமித்து  ஆசிரியர்களுக்கு முறையான  பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழனுக்கு பிரச்னை என்றால் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் இணைந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

 

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதியதாக 7 நீதிபதிகள் நியமிக்கப்ட்டுள்ளதாகவும் அவர்கள் தேவநாகரிக மொழியில் கையொப்பமிட்டு அதில் சேர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளதாக  தெரிகிறது.நாட்டில் 22 மொழிகள் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன.அதில்11 மொழிகள் தேவநாகரிக மொழியை சார்ந்தது மற்ற 11 மொழிகள் தனித் தன்மை கொண்டது. நீதிபதிகள் நியமனத்தில் அறிவுருத்தப்பட்டுள்ள கையொழுத்திடும் உத்தரவு  மற்ற மொழிகளின் தனித் தன்மை அழித்துவிடும் என்பதால் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.உலக தமிழர்களே ஒன்றுபடுவோம் என்ற முழக்கத்துடன் தமிழியக்கத்தை தொடங்குவோம் என்று பேசினார்.

 

அவரை தொடர்ந்து மதிமுக பொது செயலாளர் வை.கோ ,உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் ,முன்னாள் அமைச்சர் என்.நல்லுசாமி ,  நாஞ்சில் சம்பத் ,பேராசிரியர் அப்துல் காதர் ,உ.மு சேதுராமன் ,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜா ராமன், ராஜேந்திரன் ,தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத்  ,விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா போபால் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்  மற்றும் தமிழ்அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தமிழியக்கம் தொடங்க வேண்டியதின் அவசியம்  பற்றிய பேசினார்கள்.

 

இந்த நிகழ்ச்சிக்கு வந்த வை.கோவிடம், வை.கோவை கடுமையாக அரசியல் மேடைகளில் விமர்சித்த அவரது முன்னால் தளபதியும், இன்று அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நாஞ்சில் சம்பத் கைகொடுத்து நலம் விசாரித்து பேசிக்கொண்டனர். இது பார்வையாளர்களை ஆச்சர்யப்படவைத்தது.
 

சார்ந்த செய்திகள்