ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, த.வெ.க. உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 08. 15 மணியளவில் தபால் வாக்குகள், எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 08.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் சுமார் 600 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை வகித்தார். காலை 09.40 மணி நிலவரப்படி 2 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18 ஆயிரத்து 873 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதே சமயம் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியின் 2 ஆயிரத்து 268 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 16 ஆயிரத்து 639 ஆக உள்ளது. முன்னதாக காவல்துறையினருடன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், வாக்கு எண்ணும் மையத்தில் நாம் தமிழர் கட்சியின் முகவரை அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.