![Panchayat Vice President incident after entering house](http://image.nakkheeran.in/cdn/farfuture/TSxTj5mfdIuCFYBzYMcaIi2dQZPwG6G-w20gtZ8oedc/1738993682/sites/default/files/inline-images/58_52.jpg)
திருப்பத்தூர் அருகே உள்ள மட்றப்பள்ளி பகுதியை சேந்ந்த திருப்பதி(50). திமுக பிரமுகரான இவர் மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்வதால் திருப்பதியும் வசந்தியும் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(6.2.2025) இரவு சுமார் 12 மணியளவில் திருப்பதியும், வசந்தியும் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளது. அப்போது செய்வது அறியாமல் தவித்த கணவன் - மனைவி இருவரையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் வசந்தி ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த திருப்பதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து வசந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக நில பிரச்சனை தொடர்பாக இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகே காரணம் தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.