கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவுக்கு சென்றபோது வேன் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோவிந்தன் (49). இவரது மகளுக்கு கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கோவிந்தனின் உறவினர்கள் நண்பர்கள் சுமார் 30பேர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனை வாடகைக்கு பேசி எடுத்துக்கொண்டு திருமண விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற வேனை ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் வயது(39) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வேனில் 15 ஆண்கள், 10 பெண்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 30 பேர் பயணித்தனர். காலை சுமார் 7.30 மணி அளவில் ஆலத்தூர் கிராமம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி வேனை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே மற்றொரு வாகனம் வந்துள்ளது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் லாரியை இடதுபுறம் திருப்பி உள்ளார்.
இதைக் கண்டு பதற்றம் அடைந்த வேன் டிரைவர் லாரி வேன் மீது மோதாமல் இருக்க வேனை இடதுபுறம் திருப்பியபோது அந்த வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிக்கி வேன் டிரைவர் உள்பட 30 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அப்பகுதியாக வாகனங்களில் சென்றவர்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்துக்கு காரணமான டாரஸ் லாரி டிரைவர் விபத்து நடந்ததும் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவானார். போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.