Skip to main content

19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழக அரசு தகவல்!

Published on 11/02/2025 | Edited on 11/02/2025

 

Employment for 19 thousand people Tamil Nadu government information

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.02.2025) 18வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதிலும் குறிப்பாக 2025 - 2026ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அமைச்சரவை கூட்டத்தில் 19 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முதலீடுகளுக்குத் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வேலூர், திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுக்கால பிரச்சினைக்குத் தீர்வு. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் ‘பெல்ட் ஏரியாக்களில்’ ஆட்சேபனையற்ற  புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம். 6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்