
தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கிய கிராமப்புற ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான ஆங்கில வழிக் கல்வியை வழங்க எல்.கே.ஜீ, யூ.கே.ஜீ வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்கியுள்ளது.
இதனை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கும் நோக்குடன், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகப்படுத்தவும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் தனித் திறன்களில் பல்வேறு நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதைப் பறைசாற்றி பொதுமக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும்.
அதற்காக சில வித்தியாசமான முயற்சிகளை, மக்களை ஈர்க்க மாணவ – மாணவிகளை கொண்டு செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அரசுப் பள்ளியான திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 542 மாணவர்கள் ஒரே நேரத்தில் நாற்காலியில் நடனம் ஆடினார்கள்.
2. பழம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 722 மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகாசனப் பாடம் கற்றுக் கொண்டார்கள்.
3. மாமண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 787 மாணவர்கள் ஒரே நேரத்தில் 10 நிமிடங்களில் காகிதக் கப்பல்களை குழுக்களாக செய்தனர்.
4. களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 621 மாணவர்கள் மனித மூளைப் படங்களுக்கு வண்ணங்கள் தீட்டினார்கள்.
5. பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 735 மாணவர்கள் இரு பரிமான கணித வடிவங்களை வரைந்து வண்ணங்கள் தீட்டினார்கள்.
6. களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 780 மாணவர்கள் தேக்கரண்டியில் எலுமிச்சையுடன் வாயில் கவ்வி ஒடினார்கள்.
7. மேல்செங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 400 மாணவர்கள் 30 நிமிடங்களில் ஒரிகாமி உருவங்களை குழுக்களாக செய்தார்கள்.
8. கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 525 மாணவர்கள் 30 நிமிடங்களில் ஒரிகாமி இதயங்களை குழுக்களாக செய்தார்கள்.
9. காட்டம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 368 மாணவர்கள் ஒரே நேரத்தில் சூர்ய நமஸ்காரம் செய்தார்கள்.
10. தொரப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 429 மாணவர்கள் வேதியியல் விதிகள் மற்றும் சூத்திரங்களை எழுதினார்கள்.
11. காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 1106 மாணவர்கள் இரசாயண கலவை விதிகளை எழுதினார்கள்.
12. வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 374 மாணவர்கள் பிதாகரஸ் தேற்றத்தினை எழுதினார்கள்.
13. வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயை சேர்ந்த 1502 மாணவர்கள் திருக்குறள் படித்தார்கள்.
14. மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 347 மாணவர்கள் மேசையில் யோகாசனம் செய்தார்கள்.

10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனை முயற்சியகளால் மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கையும், சுயசிந்தனை அதிகரிப்பதுடன், படிப்பினை கற்றுக் கொள்வதில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும், அரசு பள்ளிகள் மீதான பார்வை மாறுப்படும் என்னும் நோக்கில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதனை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்க முடிவு செய்தனர் அதிகாரிகள். அதற்காக ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, உலக சாதனை நிறுவனம், எலைட் உலக சாதனை நிறுவனம் பி.லிட்., இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு சாதனையை அங்கீகரித்தனர்.
அதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வகையான உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்களை 14 பள்ளிகளின் மாணவ மாணவிகளின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமியிடம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, உலக சாதனை நிறுவனம், எலைட் உலக சாதனை நிறுவனம் பி.லிட்., இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மாணவ – மாணவிகள், ஆசிரியர் பெருமக்கள், அதிகாரிகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.