நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
’’நம் நாட்டின் பூர்வகுடி மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ச்சியாக உரிமைக்குரல் எழுப்பி வருகிற, 'சிறைப்பட்ட கற்பனை' என்கின்ற புகழ்பெற்ற நூலை எழுதிய எழுத்தாளர் பத்திரிக்கையாளர், மனித உரிமைப் போராளி வரவர ராவ் மற்றும் அவரோடு கைதாகியிருக்கிற சமூகச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கொன்சால்வஸ், கௌதம் நவ்லாகா, அருண் பெரைரா ஆகியோர் வீடுகளில் முன்னறிவிப்பின்றி அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பெயரில் உரிமை மீறல்கள் நகழ்ந்திருப்பதாகவும், அவர்கள் நகர்புற நக்சலைட்டுகள் (Urban Naxals) என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வருகின்ற செய்திகள் மிகவும் கண்டனத்திற்குரியது.
மத்தியிலே மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தீவிர இந்துத்துவ மத உணர்வு கொண்ட அமைப்புகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமை பெற்ற அமைப்புகளாக செயல்படத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக 'சனாதன் சன்ஸ்தா' என்கின்ற அமைப்பு வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நாட்டிலே குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு கொடுஞ்செயல்களை செய்ய சதித்திட்டம் தீட்டி இருந்ததாக செய்திகள் வெளியான சூழலில் இத்தகைய மிரட்டல் சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஏற்கனவே, மதவெறி எதிர்ப்பாளர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களுமான கௌரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே போன்ற பலர் மர்மமான முறையில் கொல்லப்படுவதும் இந்தக் கொலைகளுக்குப்
பின்னால் இந்துவெறி அமைப்புகள் இருப்பதாக செய்திகள் வெளிவருவதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசு மௌனம் காப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள கருத்துரிமையை மத்தியில் ஆண்டுக் கொண்டிருக்கின்ற மோடி அரசாங்கம் நசுக்குவதில் மிகுந்த கவனம் கொண்ட இருக்கிறது. மதவெறி உணர்விற்கு எதிராக எவர் கருத்து கூறினாலும் அவரைத் ,'தீவிரவாதி' என்றும் 'மாவோயிஸ்ட்' என்றும் பட்டம்கட்டி வழக்குகள் பாய்ச்சி அவர்களை ஒடுக்குவதற்கான வேலைகளை தொடர்ச்சியாக மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு மராட்டிய மாநில பாஜக அரசும் முழுமையாக உடன்பட்டு அறிவுசீவிகளைப் பத்திரிக்கையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை முடக்குவதில் மும்முரம் காட்டிவருகிறது.
தொடர்ச்சியான மதவெறி பாசிச முகத்தை காட்டி வரும் பாஜக கட்சியும், மத்திய அரசும்,மராட்டிய பாஜக அரசும் இந்த நாட்டின் சனநாயகச் சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எதிரானவையாகும்.
நீதிமன்றமே வரவர ராவ் உள்ளிட்ட முற்போக்கு சிந்தனையாளர்களின் கைது தவறு
என்பதை சுட்டிக்காட்டி அவர்களை சிறைப்படுத்தக் கூடாது எனவும், வீட்டுக்காவலில்
வைத்துதான் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறது. சமூகவலைதளங்களில்
'நானும் ஒரு நகர்ப்புற நக்சலைட்டு தான் (Am Urban Naxalite)' என்கிற கருத்துரு வாக்கம் இளைஞர்களால் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாடெங்கும் ஜனநாயக சக்திகள், முற்போக்கு சிந்தனையாளர்களின் கடும் எதிர்ப்பை
சந்தித்திருக்கிற இந்த அநீதியான சமூகச் செயற்பாட்டாளர்களின் கைதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசையும் மராட்டிய மாநில அரசையும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.