Skip to main content

மீண்டும் மீண்டும் நாட்டு மக்களின் எரிச்சலுக்கும், நகைப்புக்கும் ஆளாக வேண்டாம்! மு.க.ஸ்டாலின் 

Published on 01/04/2018 | Edited on 01/04/2018


 

கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகளைக் களவுபோக அனுமதித்துவிட்டு, பின்னர் ஒப்புக்காக லாயத்தைப் பூட்டும் ஒருபயனுமற்ற காரியத்தையே மீண்டும் மீண்டும் செய்து, நாட்டு மக்களின் எரிச்சலுக்கும், நகைப்புக்கும் ஆளாக வேண்டாம் என்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள ஆறுபக்க - சுய ஆறுதலுக்கான அறிக்கை, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அதிமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க தேவையான அக்கறை இல்லாமல், தமிழக நலனைக் காப்பாற்ற இயலாமல், அதிமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதற்கும், தன்னிச்சையாக முன்வந்து கொடுத்திருக்கும் மனம்திறந்த ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது.
 

பாராளுமன்றத்தை 17 நாட்கள் முடக்கியதை ஏதோ ஒரு பெரிய சாதனை போல் தனது அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். பா.ஜ.க. முதலமைச்சர்கள் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் ராஜினாமாவை கோரி பாராளுமன்றத்தை முடக்கியதற்கு, எதிர் கட்சியை சார்ந்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 25 மக்களவை உறுப்பினர்களை, மக்களவை சபாநாயகர் அவையிலிருந்து ஐந்து நாள் நீக்கி 3.8.2015 அன்று உத்தரவிட்டார். ஆனால், முதலமைச்சர் சாதித்தாகக் கூறும் 17 நாள் அமளிக்கு அப்படியொரு, “அவை நீக்கத்தை” அதிமுக எம்.பி.க்கள் சந்திக்காமல் தொடர்ந்து எப்படி அவையை முடக்கும் சுதந்திரம் கிடைத்தது?
 

ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க.வின் பரிபூரண ஒத்துழைப்பின் பேரில், திரைமறைவு ஏற்பாட்டின்படி, மத்திய ஆட்சியாளர்களின் கண் அசைவுக்கு ஏற்ப நடத்திய கண்துடைப்பு நாடகம்தான், அவையில் நிகழ்த்திய நாடகம் என்பது நிரூபணமாகியிருக்கிறது. குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற பாஜகவின் மலிவான தந்திரத்திற்கு அதிமுக பலியாகியிருக்கிறது. ஆகவே அதிமுகவின் அவை அமளி என்பது “கபட நாடகமே” தவிர, காவிரி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக அல்ல என்பதைத் தமிழக மக்கள் மிகத்தெளிவாகத் தெரிந்துகொண்டு விட்டார்கள்.
 

அதேபோல், “மத்திய அரசு மூன்று மாதகாலம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நேரத்தில், மாநில அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்திருப்பது”, பா.ஜ.க. - அதிமுகவிற்குள் காவிரி விவகாரத்தில் போட்டுக்கொண்டுள்ள இருட்டு ஒப்பந்தத்தின் வெளிப்பாடு தானே தவிர, காவிரி மேலாண்மை வாரியத்தை எப்படியும் அமைத்தே தீரவேண்டும் என்று அதிமுகவிற்கு இருக்கும் அடிஆழ உணர்வாக நிச்சயமாகத் தெரியவில்லை.
 

ஏனென்றால், “மூன்று மாதகால அவகாசம் தரவேண்டும்”, “கர்நாடக தேர்தல் நேரத்தில் செயல்திட்டத்தை வெளியிட்டால் அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்படும்”, “காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படியான செயல்திட்டத்தில் மாற்றம் செய்யலாமா”, “காவிரி நடுவர்மன்றம் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்களையும், அதிகாரத்தையும் மத்திய அரசு திருத்தி அமைக்கலாமா”, என்றெல்லாம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்துள்ள உதவாக்கரை மனுமீது ஒரு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்க முடியாமல் “காவிரி விளக்கம்” என்ற பெயரில் முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலிருந்து “பாராளுமன்ற அமளி”, கூட்டணிக்கு "புதியமனு” போடுவதிலும், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” தொடுத்திருப்பதிலும் தொடருகிறது என்பது வெளிப்படையாக அம்பலத்திற்கு வந்துவிட்டது.
 

ஆகவே, கண்ணாமூச்சி விளையாட்டை இன்னும் நடத்தி, ஏமாற்றிக் கொண்டிருக்காமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற நேரத்தில், இப்போது வாதிட்டுக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களை விட, காவிரி பிரச்சினையில் அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்களை புதிதாக அமர்த்தி, வாதிட்டு மத்திய அரசின் புதிய மனுவினை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகளைக் களவுபோக அனுமதித்துவிட்டு, பின்னர் ஒப்புக்காக லாயத்தைப் பூட்டும் ஒருபயனுமற்ற காரியத்தையே மீண்டும் மீண்டும் செய்து, நாட்டு மக்களின் எரிச்சலுக்கும், நகைப்புக்கும் ஆளாக வேண்டாம்! இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்