கரூர் மாவட்டம் குளித்தலை மணல்தட்டையில் அனுமதியில்லாமல் இயங்கி வந்த குவாரியை மூட சொல்லி ஆர்பாட்டம் நடத்தியவர்களை குவாரியை மூட சொல்லி முற்றுகையிட்டதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் 2 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குளித்தலை பகுதியில் மாயனூர் முதல் தாயனூர் வரை காவிரியிலிருந்து பிரியும் தென்கரை வாய்கால், கட்டளை மேட்டுவாய்க்கால், மற்றும் கிளை வாய்க்கால்கள் வழியாக குளித்தலையின் 1000 ஏக்கர் வாழை நெல், கரும்பு வெற்றிலை, கோரை , உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இந்த பகுதி முழுவதுமே விவசாயம் செழித்து காணப்படும்.
கடந்த 20 ஆண்டுகளில் காவிரி பகுதியில் 30 அடிக்கு கீழ் மணல் எடுத்து 70 சதவீத மணல் கொள்ளையடித்து நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழ் சென்று தற்போது உப்புநீராகவும் மாறி இன்னும் 20 அடிக்கு கீழ் மணல் எடுத்தால் பாறைகள் தட்டுப்படும் அந்த அளவிற்கு பாலைவனமாக மாறிக்கொண்டே வருகிறது.
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை தமிழக அரசே நடத்துகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் மணல்தட்டை அருகே மணல்குவாரி அமைக்கும் போது அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தால் அதிகாரிகள் 3 முறை பேச்சு வார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் கடந்த மாதங்களில் அனுமதி எதுவும் இல்லாமல் மணல் குவாரி நடத்தவும் தான் போராட்டம் வெடித்தது.
இன்று திருச்சி மகளிர் சிறையிலிருந்து பெண் தோழர்கள் ராஜேஸ்வரி, மதுபாலா பெண்கள் ஜாமீனில வெளியே வந்தனர். அப்போது அவர்கள்... நம்மிடம் பேசியபோது,
’’கரூர் மாவட்டம் மணத்தட்டையில் தற்போது மணல் குவாரி இயங்கி வருகிறது . இது மணப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் 430 மீட்டர் தூரத்தில் இருப்பதால் இந்த மணல் குவாரி இயங்குவதற்கு வழங்கபட்ட அனுமதி சட்டவிரோதமானது, செல்லுபடியாகாது என மதுரை உயர்நீதி மன்றம் ஆணையர்குழு நேரடியாக பார்வையிட்டு 11.09.2017அன்று உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் குளித்தலை ராஜேந்திரன் மணல் கிடங்கு அனுமதி கொடுக்கவில்லை என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர் .
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி 09.10.2018 அன்று நாங்கள் கலெக்டரிடம் நேரடியாக புகார் கொடுத்தோம். ஆனாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை நடவடிக்கை எடுக்காமல் எங்களை சந்திப்பதையே தவிர்த்து வந்தார்.
பலகோடி மதிப்புள்ள சமூக சொத்து சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி சமூக சொத்தை பாதுகாக்கவும், குளித்தலை-மணப்பாறை குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், கடந்த 12.10.2018 வெள்ளியன்று மணல் குவாரியை நோக்கி சென்ற போது வழியில் பை பாஸ் சாலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதிகாரிகளிடம் சரியான ஆவணம் இருந்தால் இங்கு வந்து பேச சொல்லுங்கள் என டிஸ்பியிடம் கூறிக்கொண்டு இருக்கும் போதே, காவல்துறை பதில் ஏதும் கூறாமல் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த குவாரியில் பொதுப்பணித்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களின் உத்தரவு படி தினந்தோறும் 4 கோடி மதிப்புள்ள மணல்களை திருடி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்தும் வரை எங்கள் போராட்டம் ஓயாது’’ என்றனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பெண்களை வரவேற்ற தோழர் முகிலன் நம்மிடம், ‘’ காவேரியை பாதுகாக்க, சமூக சொத்தை பாதுகாக்க அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் அரசு அதிகாரிகள் செய்யவேண்டியதை, சமூக அக்கறையோடு செய்தவர்களை தற்போது பிணையில் விட முடியாத பிரிவுகளில் (143, 341, 353 IPC ) காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர் ராஜேஸ்வரி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மதுபாலா என இரு பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை என கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விட முடியாத பிரிவுகளில் சிறையில் அடைத்து வைத்தது அறமானதும் , நீதியானதும் அல்ல .
உடனடியாக தவறான ஆவணங்கள் காட்டி நீதிக்கு புறம்பாக இயங்கும் மனத்தட்டை மணல் குவாரி இயங்க தடை விதிக்க வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் அரசு மணல் கிடங்கு மூடப்பட வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களின் தவறான நோக்கத்திற்கு அதிகாரிகள் துணை போவதை தடுத்து நிறுத்த வேண்டும். பொய்யான புகாரை (தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ) கொடுத்துள்ள பொதுப்பணிதுறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒரு பக்கம் மழை பெய்து கொண்டிருக்கிறது, மறுபக்கம் விவசாயத்திற்கு காவிரி நீர் கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் துணையோடு காவிரி மணல்களை கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல் மணல் கொள்ளையர்கள்.