கீரமங்கலம், நகரம் ஆகிய பகுதிகளில் அம்புலி ஆற்றங்கரை ஓரங்களில் 5 ஆயிரம் பனை விதைகளும், 50 அரசங்கன்றுகளையும் இளைஞர்கள், நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்தனர்.
நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் பனை மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். ஆனால் குளம், ஏரி போன்று பல இடங்களிலும் இருந்த பனை மரங்கள் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று கிராமங்கள் தோறும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக புறப்பட்டு குளம், ஆறு, பொது இடங்களில் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
அதே போல நாம் கீரமங்கலம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் துரைப்பாண்டியன் தலைமையில் மரம் தங்கசாமி நினைவாகவும் கீரமங்கலம், நகரம் வழியாக செல்லும் அம்புலி ஆற்றின் குறுக்கே குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பிரதான வாய்க்கால் கரைகளில் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் அதே பகுதியில் 50 அரச மரக்கன்றுகளையும் நடவு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது.. பனை மரங்கள் வளர்க்கப்படும் போது நிலத்தடி நீர் கீழே செல்லாமல் பனைமரங்கள் பாதுகாப்பதுடன் கரைகளையும் பலமாக பாதுகாக்கிறது. அதனால்தான் பனை விதை நடவு தொடங்கி உள்ளோம். முதல்கட்டமாக 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் சுமார் 20 ஆயிரம் பனை விதகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதே போல பல வருடங்கள் வளரக்கூடிய அரசு மரங்கள் மற்றும் ஆல மரக்கன்றுகளையும் நடவு செய்து வருகிறோம் என்றனர். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் பனை விதைகளை விதைத்து அழிவின் விளிம்பில் இருக்கும் பனைமரங்களை காத்து நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்றனர்.