Skip to main content

மாடியிலிருந்து விழுந்த செவிலியர் உயிரிழப்பு; பேச்சுவார்த்தை நடத்திய ஆணையர்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

trichy hospital nurse incident road blocked by parents and relatives

 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறை அடுத்த சாந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதா. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறுவதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிவேதா என்ற 19 வயது பெண் நேற்று பிற்பகல் 3:30 மணி அளவில் 5வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பெண்ணின் இறப்பு பற்றி பெற்றோர் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகமோ சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனையை இரவு 8:30 மணி அளவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே எப்படி இறந்தார். இறப்புக்கான காரணம் தெரிய வேண்டும். எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். அவளுடைய சாவில் மர்மம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்  மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

 

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக விரைந்து வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர் ராஜு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பிறகு இரவு 10:15 மணிக்கு கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் வழக்கு பதிந்து இந்த பெண்ணின் இறப்பு காதல் விவகாரமா, கொலையா, தற்கொலையா வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்