தர்மபுரி அருகே, தொழிலாளியை கடத்திச்சென்று 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள கூத்தப்பாடி மடம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் விஸ்வநாதன் (37). இவருடைய மனைவி மஞ்சுளா. விஸ்வநாதன், மும்பையில் நொறுக்குத்தீனி கடை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுக்கு முன்பு, சொந்த ஊர் திரும்பிய அவர், இங்கேயே தங்கிவிட்டார்.
ஆனாலும் சரியாக வேலைக்குச் செல்லாமல், அவ்வப்போது கிடைத்த கூலி வேலைகளைச் செய்து வந்தார். டிச. 12ம் தேதி காலை பென்னாகரம் சென்ற விஸ்வநாதன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், விசாரித்துப்பார்த்தும் அவர் சென்ற இடம் தெரியவில்லை. அவருடைய அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த விஸ்வநாதனின் மனைவி மஞ்சுளா, தனது கணவரை இரண்டு நாள்களாக காணவில்லை என்று ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் அந்தப் புகாரில், ''என் கணவரின் அலைபேசியில் இருந்து அவருடைய தம்பி பூபதிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விஸ்வநாதனை உயிருடன் விடுவிப்போம். பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதேபோல் மர்ம நபர்கள் மூன்று முறை மிரட்டினர். என் கணவரை பத்திரமாக மீட்டுக் கொடுக்க வேண்டும்,'' என புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூபதியின் அலைபேசிக்கு வந்த அழைப்பு, எந்த செல்போன் டவர் எல்லைக்குள் வருகிறது என்பதை ஆய்வு செய்தனர். இதில், கடத்தல் ஆசாமிகள் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து பேசியிருப்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்து வந்த மூன்று அழைப்புகளுமே ஒரே இருப்பிடத்தைக் காட்டியது.
இதையடுத்து காவல்துறையினர் ஓமலூருக்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சல்லடை போட்டுத் தேடினர். மேலும், ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினரின் உதவியையும் நாடினர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (டிச. 16ம் தேதி) இரவு கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை ஓமலூர் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்து பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் ஒகேனக்கல் காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கைதான கடத்தல் கும்பலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விஸ்வநாதனையும் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், ஓமலூரைச் சேர்ந்த ரத்தினம் (45), மணிவேல் மகன் பாஸ்கர் (24), மேட்டூர் பழனிசாமி மகன் தமிழரசன் (23), காடையாம்பட்டி காந்தி (43), பென்னாகரத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய 5 பேர்தான் விஸ்வநாதனை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியிருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரும் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. பிடிபட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.