Skip to main content

“ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த வழக்கும் வராது என நம்புகிறோம்” - திருச்சியில் கொண்டாட்டம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

People celebrating the Jallikattu verdict trichy

 

திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில் ஜல்லிக்கட்டு என்பது கலாச்சாரம் சார்ந்தது. எனவே அதில் உச்ச நீதிமன்றம் தலையிடாது. மேலும் தமிழக அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது செல்லும். இனி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்தவித தடையும் இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தது.

 

இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் ரயில்வே ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நல சங்கத்தின் தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். மேலும் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் ஒண்டிராஜ், இந்த தீர்ப்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

 

மேலும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இனி ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் வராது என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில இளைஞரணி தலைவர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்