
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் இந்தப் போராட்டத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் காரை ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்ததற்காக அவர் மீது சட்டப்பிரிவு 302 கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தங்களுடைய கண்டனத்தை பதிவுசெய்துவருகின்றனர். மேலும், இப்பிரச்சனையை அடுத்து நடைபெற்ற கலவரத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு, மத்திய இணையமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்வதோடு மத்திய இணையமைச்சரையும் கைது செய்ய வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.