திண்டுக்கல்லில் நேற்று ஒரே நாளில் 157 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 157 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் மாநகராட்சியில் மட்டும் 56 பேருக்கு தொற்று உறுதியானது. சந்து நாயக்கர் தெரு, ரேணுகாதேவி தெரு, 35 ஆவது வார்டு கொல்லம் பட்டறை, முதல் வார்டு கருணாநிதி நகர், ஏழு எட்டாவது வார்டு ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்குத் திண்டுக்கலில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கரோனா காரணமாக ஒட்டன்சத்திரம் காந்தி காமராஜர் காய்கறி மார்க்கெட் வருகிற 21-ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது வியாபாரிகள் அனைவரும் வீடுகளையே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேறு இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதன்பிறகு மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் வணிகர்கள் தாமாக முன்வந்து 16ஆம் தேதி முதல் வருகிற 21-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னாளபட்டி, எரியோடு, வடமதுரை ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பழனியில் இரண்டு வயது சிறுமி உள்பட 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பங்காளி மார்க்கெட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்குத் தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அதனால் மார்க்கெட் மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு 41பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஜின்னா நகரைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்குக் கரோனா உறுதியானது. ஆனால் காலையில் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் சப் இன்ஸ்பெக்டருக்கு தொற்று ஏற்பட்டதால் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதே போல் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் ஆகிய பகுதிகள் கரோனா மையமாக மாறி வருகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்களை, கரோனா கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது .
கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பி வருகிறது.