கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான விழிப்புணர்வு மக்களிடையே சென்றடைந்திருக்கின்றதோ இல்லையோ அந்நோயினைப் பற்றிய மரண பீதி மக்களிடையே பரவலாகக் காணப்படுகின்றது. அதனின் வெளிப்பாடு தான் கமுதியில் இன்று நடந்ததுள்ளது ஒரு சம்பவம்.
அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் ராமநாதபுர மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் சுமார் 650க்கும் மேற்பட்டோர் பல்லாண்டு காலமாக மீன்பிடி கூலிகளாக தொழில் செய்து வருகின்றனர். தற்பொழுதைய கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்திரவு அமலுக்கு வர கர்நாடகா மங்களூரில் மீன்பிடி தொழில் முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தங்க இயலாத சூழலில் பெரும்பான்மையான மீனவர்கள் சொந்த மாவட்டத்திற்கு திரும்ப வந்தனர். இதில் பல மீனவர்கள் வாடகை வேன்கள், கார்கள் மற்றும் பஸ்களில் வந்து சத்திய மங்கலத்திற்கும், பண்ணாரிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியிலுள்ள தமிழக எல்கைப் பகுதியிலுள்ள டோல்கேட் அருகிலேயே இறக்கி விடப்பட்டு அங்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து அங்கேயே தங்க வைக்கப் பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில், சத்திய மங்கலம் பார்டர் அருகில் தங்க வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை மூன்று அரசு பேருந்துகளில் அமர்த்தி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து வந்து அங்கேயே அவர்களை தங்க வைத்து தனிமைப்படுத்த முனைந்துள்ளது மாவட்ட நிர்வாகம். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, " எதற்கு இங்கு கொண்டு வந்தீர்கள்..? எங்களுக்கும் கரோனா வரனுமா என்ன..? அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வகமோ, " அவர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. முழுவதுமாக பரிசோதித்து விட்டோம். இருப்பினும் வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வந்ததால் இங்குள்ள கல்லூரியில் வைத்து தனிமைப் படுத்தவுள்ளோம்." மக்களிடையே விளக்கம் கொடுத்துப் பார்த்தது. மக்களும் விடாப்பிடியாக இருந்ததால் பேருந்துகள் அங்கிருந்து திரும்ப சென்றன.
மரணப்பீதியுடன் இருக்கும் இம்மக்கள் விழிப்படைவது எப்போது..? அவர்களும் நம் மக்கள் தானே..? என பெருமூச்சிரைக்கின்றனர் மாவட்டத்து மீனவ மக்கள். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது.