![tr](http://image.nakkheeran.in/cdn/farfuture/jEgklbnVOAOAKRJfPGURN8iYDeXFjyL5oRODFcPCTnM/1548509166/sites/default/files/inline-images/tr%20balu1.jpg)
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புக்கு போராடி குண்டடிபட்டு இறந்த மாணவர் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் வகையில் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு கலந்துகொண்டு பேசுகையில் திமுக பணக்காரனின் கட்சி அல்ல கட்சியின் ஆரம்பகால வளர்ச்சியின் போது ஆலமரத்தடி, டீக்கடை, மளிகை கடை, தெருக்குத்து உள்ளிட்ட பகுதிகளில் உட்கார்ந்து கூட்டங்களை நடத்தி தற்போது ஆலவிருச்சகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படி சேர்க்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் இந்தி மொழிக்கு எதிராக போராடி உயிரை நீத்த தியாகத்தால் கட்சியில் முதல்வராகவும், அமைச்சர்களாகவும், எம்பி, எம்எல்ஏக்கள் ஆக பதவி வகித்தோம்.
இன்று தமிழ் மொழிக்கு பாதுகாப்பு இல்லை., தகுதியே இல்லாத இந்தி மொழி ஆட்சி மொழியாக உள்ளது. நம் நாட்டில் 22 மொழிகள் தேசிய மொழியாக பேசப்பட்டு வருகிறது. நாட்டில் காக்கா அதிகமாக பறக்கிறது என்பதால் அதனை தேசிய பறவையாக அறிவிக்க முடியுமா? மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மயிலை தானே தேசிய பறவையாக அறிவித்துள்ளார்கள். அதேபோன்றுதான் இந்தியை தேசிய மொழி என்று அறிவித்துள்ளார்கள்.
மிகச்சிறிய நாடான தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகள் ஆட்சி மொழியாக உள்ளது. இவ்வளவு பெரிய நாட்டில் மயிலைவிட அழகாக உள்ள தமிழ் மொழியை தேசிய மொழியாக்க முடியவில்லை. 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து வலியுறுத்துவோம்.
![tr](http://image.nakkheeran.in/cdn/farfuture/ljVbe1RyPtewzX_PR-gppx4q8EEIxZWtH60MYHvK4jE/1548509196/sites/default/files/inline-images/tr%20balu2.jpg)
மொழிப்போர் இன்னும் முடியவில்லை, தமிழ்நாட்டை இந்தியால் அடிமைப்படுத்துகிறார்கள். அதேபோல் இனப்போர் முடியவில்லை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரியம் ஆதிக்கம் மேலோங்குகிறது. அதேபோல் ஆணாதிக்கச் சிந்தனைகள், தீண்டாமை கொடுமைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் இஸ்லாமியம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் படையெடுப்புக்குப் பிறகும் தமிழ் மொழி நிலைத்து நிற்பது என்றால் அதன் வளமும் செறிவும் தான்.
தமிழகத்தில் மன்னராட்சி, மதம் சார்ந்த ஆட்சி, குறுநில மன்னர்கள் ஆட்சி கலங்களில் தமிழ் மொழி செம்மையாக இருந்துள்ளது. இந்தி எதிர்ப்புக்கு தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படவேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தமிழ் வாழ்க என்று உயிர் தியாகம் செய்த தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரும் தலித் சமூகத்தையும், பிற்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள். இவர்களின் உயிர் தியாகத்தால் தமிழகத்தில் இந்தி விரட்டியடிக்கப்பட்டு தமிழை மீட்டெக்கப்பட்டது.
தமிழ் மொழிக்காக எந்த காங்கிரஸ் ஆட்சியில் உயிர் தியாகம் செய்யப்பட்டதோ, அதே அவர்களது ஆட்சிக்காலத்தில் தலைவர் கலைஞர் முயற்சியால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றோம். மொழியியல் பல நாடுகள் பிரிந்து உள்ளது. அதே மொழிக்காக பல நாடுகள் இணைந்து உள்ளதை உலக நாடுகளில் பார்க்க முடிகிறது. உலகத்தில் 193 நாடுகள் ஒன்றிணைந்து தாய் மொழியை காக்க வேண்டும் என்று பிப்ரவரி 21 தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் காதலர் தினம், எய்ட்ஸ் தினம், அம்மா தினம், அப்பா தினம் என பல்வேறு தினங்கள் உள்ளது தமிழ்தாய் தினம் என்று இல்லை. இதனை ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவார் என்று அவரது பேச்சை முடித்தார் .கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.