Skip to main content

"உங்களாலதான் நாங்க ரோட்ல நடக்க முடியல, வீடு கிடைக்கல..." - இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கெதிராக கொதித்து எழுந்த திருநங்கைகள்!

Published on 09/05/2018 | Edited on 09/05/2018

சமீபத்தில் வெளியான ''இருட்டு அறையில் முரட்டு குத்து'' என்ற திரைப்படம் தியேட்டர்களில் வசூலையும், சமூக ஆர்வலர்கள், இன்னபிற தரப்பினரிடையே பெரும் கண்டனத்தையும் பெற்று வருகின்றது. பல்வேறு தரப்பிலிருந்து இந்த திரைப்படத்தில் கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கும் நோக்கில் ஆபாசமான வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கு உடனே தடைவிதிக்கவேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் விஜய் மில்டன், தயாரிப்பாளர்கள் சங்கிலி முருகன், ஜே.எஸ்.கே சதீஷ்  ஆகியோர் இந்தப் படத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த படத்தில் ஓரின சேர்க்கையாளர்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் காட்சிப்படுத்தியுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து LGBT செயல்பாட்டாளர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருநங்கை அப்ஸரா  மற்றும் ஆஷா ஆகியோர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 

apsara



திருநங்கை அப்ஸரா பேசியது,

"வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களைத்தாண்டி வந்திருக்கேன். எங்களைப் போன்ற திருநங்கைகள் நிறய பேர் இருட்டில்தான் வாழ்ந்து வருகின்றனர். என் சகோதர சகோதரிகள் எல்லாமே இன்னமும் கஷ்டப்பட்டுதான் இருக்காங்க. உண்மையான முகத்துடன் உண்மையான உலகத்துல கால் வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்குமே தெரியும். அந்த நேரத்துல மாஸ் மீடியா என்கிற சினிமா, மக்களை ஈசியாக சென்று சேரக்கூடிய இந்த மீடியத்துல இப்படி ஒரு படம்... கெளதம் கார்த்திக் ஒன்னும் கஷ்டப்படுற, ஏதோ ஒரு படத்துல நடிச்சே ஆகணும்னு நிலை இருக்குற நடிகர் கிடையாது. ஒரு மிகப்பெரிய நடிகரோட மகன், மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர். அவர் ஏன்  இந்த மாதிரி படங்களிலெல்லாம் நடிக்கிறாரு? இந்த படத்தோட இயக்குனர் இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தி சொல்ல விரும்புறாரு? 'கே', ஹோமோசெக்ஸ் (ஓரின சேர்க்கை) பற்றி கேவலமா காமிச்சிருக்காங்க, ரெண்டு நாளுக்கு முன்ன கூட ஸ்கூல்ல ஒரு மாணவனுக்கு ஹோமோ செக்சுவல் டார்ச்சர் கொடுத்திருக்காங்க. 

ஸ்கூல்களிலும் பாலின மாற்ற உணர்வு கொண்டுள்ள சிறுவர்களை கேலி செய்றாங்க. வீடு வாடகைக்கு எடுக்க முடியல, வாடகை கொடுக்கும்போது, அப்படி இப்படின்னு ஏதாவது சந்தர்ப்பத்துல அத்து மீறி பாலியல் தொல்லை கொடுக்குறாங்க. அப்படி இருக்க, சினிமாவுக்கென ஒரு சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கனும். எங்கள இப்படித்தான் கேவலமா பார்ப்பீங்களா? நாங்க வெளிய வந்தா கேலிதான் செய்வீங்களா? உண்மையான முகத்துடன் நாங்க வாழ முடியாதா?  இயக்குனர் சந்தோஷும் கெளதம் கார்த்திக்கும் எங்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும். நாங்க போலீஸ் கமிஷனரிடம் பெட்டிஷன் கொடுத்திருக்கோம். டிஸ்ட்ரிக் லீகல் அத்தாரிட்டி நீதிபதி ஜெயந்திகிட்ட கூட பெட்டிஷன் கொடுத்திருக்கோம். எங்க சமுதாய ஆட்களோட உரையாடல், விவாதத்துக்கு வரட்டுமே?  எக்ஸ்பிளைன் பண்ணட்டும், ஏன் இந்த மாதிரி படம் எடுத்தாங்க, ஏன் எங்கள தப்பா காமிச்சு படம் எடுத்தாங்கனு  பதில்  சொல்லட்டும்.

 


அந்தப் படத்துல ஒரு டயலாக் வருது, 'பெண்களை செஞ்சு போர் அடிச்சுடுச்சு, அதா நாங்க 'கே'ஸ பண்ணப்போறோம்'னு சொல்றாங்க. 'உங்களால நாங்க ரோட்ல நடக்க முடியல'ன்னு சொல்றாங்க. உங்களாலதான் நாங்க ரோட்ல நடக்க முடியல, வீடு கிடைக்க மாட்டேங்குது. யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் எங்ககிட்ட நடந்துக்கலாம்னுதான் பாக்குறாங்க. ஏன் நாங்க மட்டும் நல்லா  வாழணும் இந்த சமுதாயத்துலன்னு ஆச இருக்காதா? நாங்களும் உங்களோட சகோதர சகோதரிகள்தான? நாங்களும் உங்கள மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்தவங்கதான? எப்படி தைரியமா ஸ்கூலுக்குப் போக முடியும், கல்லூரிக்குப் போக முடியும், வேலைவாய்ப்பு தேடமுடியும்? வாய்ப்புகள் எப்படி கிடைக்கும்? எங்கள முழுசா சமூகம் அங்கீகரிக்கணும்னா சினிமா எங்கள  நல்ல விதமா காட்டணும். சினிமா, இளைஞர்களை ஈஸியா சென்றடையும் மீடியம். அதுல எங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்றது தப்பா தெரியலையா?

 

 

 

 

 

gowtham karthik

 


எங்களை அசிங்க அசிங்கமா திட்றது, 'ஒன்பது, உஸ்' இப்படி கேவலமா கூப்பிடுவது... இதுதான் நாகரீகமா? நேத்து விஷாலுக்கு போன் பண்ணி பேசும் பொழுது, 'வாங்க பெட்டிஷன் கொடுங்க'ன்னு சொன்னாரு. ஆனா இன்னைக்கு 'வர முடியாது, செகரட்டரி அனுப்பி வைக்கிறேன். அவர்கிட்ட கொடுங்க'ன்னு சொல்லிருக்காரு. ஒருவேளை பெரிய நடிகரோட மகன் என்பதால இருக்கலாம். ஆனால் எங்க போராட்டம் தொடரும். இதுக்கு பிறகு போலீஸ் கமிஷ்னரிடமும் போகப் போறோம். எங்களுக்காக அமைக்கப்பட்ட ட்ரான்ஸ் ஜென்டர் வெல்ஃபேர் போர்ட் செயல்படாம இருக்கு. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் என்ன பண்றாங்க?" என்றார்.  

திருநங்கை ஆஷா பேசுகையில், 

"நாங்க ரொம்ப நாளா ஒரு விசயத்த முன்வைக்கிறோம். சினிமா சென்சார் போர்டுல எங்க சமுதாயத்த சேர்ந்த ஒருத்தரும் இடம்பெறணும். ஆனா இதுவரை அது நடக்கல. கௌதமி போன்ற பெண் நடிகைகள் சென்சார் போர்டில் பார்த்துதான் இந்தப் படம் வெளிய வந்துருக்கு என சொல்கிறார்கள். எங்களோட வலி எங்களுக்குத்தான் தெரியும். அது நகைச்சுவையா, இல்ல எங்கள ஹர்ட் பண்ணுதான்னு நாங்கதான் சொல்லனுமே தவிர மத்தவங்க சொல்லக்கூடாது. நாங்கதான் குரல் கொடுக்கணும். இப்போதான் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா பெற்றோர்களுக்கும் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் எங்களோட மனநிலைய பற்றியும், எங்களை பற்றியும் புரிய வைத்துக்கொண்டு வருகிறோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் எவ்வளவோ வலிய தாங்கிகிட்டு வருகிறோம். இப்படி இருக்க இந்தப் படத்த குடும்பத்தோட போய் தியேட்டர்ல பாக்கும்போது எங்க மேல கேவலமான அபிப்ராயம்தான் வரும்.

 

gowtham with santhosh

கெளதம் - சந்தோஷ் ஜெயக்குமார்



பல தடவ நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு போன் பண்ணி எடுக்கல. அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கஷ்டப்பட்டு தொடர்பு கொண்டதுக்கு 'நாளைக்கு வரேன்'னு சொன்னவரு இன்னைக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல. இதுல இருந்தே அவருடைய தலைமைப் பண்பு என்னனு தெரியுது. அவர் வராதது இழிவான செயலாதான் தெரியுது. எங்கள சப்போர்ட் பண்ணி நேர்ல எங்க பெட்டிஷன வாங்கிருக்கணும். அதுதான் தலைவனுக்கு அழகு. கண்டனத்தை கண்டிப்பா தயாரிப்பாளர் சங்கத்துக்கும், சென்சார் போர்டுக்கும் தெரிவிக்கிறோம். முக்கியமாக இந்தப் படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த நடிகர் கெளதம் இருவருக்கும் எங்கள் வன்மையான  கண்டணத்தைத் தெரிவிக்கின்றோம்" என்றார்.       

சார்ந்த செய்திகள்