போக்குவரத்து வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போது காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். சமீபத்தில் கூட ஆட்டோவில் சென்றவருக்கு ஹெல்மட் அணியவில்லை என்று போலீசார் அபராதம் விதித்த சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சென்னையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருக்கும்போது அவ்வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவரிடம் மது அருந்தி இருக்கிறாரா என்று போலிசார் வைத்து இருக்கும் ஆல்ஹகால் அனலைசரை கொண்டு சோதனை செய்தபோது அவர் உடலில் 45 சதவீத அளவிற்கு ஆல்ஹகால் இருப்பதாகக் காட்டியதை தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே அபராதம் விதித்து அதற்கான ரசீதை அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளனர். அதற்கு அந்த இளைஞர் நான் குடிக்கவே இல்லை என்று போலீசாரிடம் எடுத்துக் கூறுகிறார். இருப்பினும் சோதனை செய்த காவல் அதிகாரி அதனை ஏற்க மறுக்கிறார். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வாகன ஒட்டி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "என்னுடைய பெயர் தீபக். எல்டாம்ஸ் சாலை வழியாக இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு செல்லும் வழியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது 45 சதவீதம் ஆல்கஹால் எனது உடலில் இருப்பதாக அவர்கள் சோதனை செய்த மெஷினில் காட்டியது. ஆனால், சிறுவயதில் இருந்தே எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. இது எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்தப் பரிசோதனை செய்து தருகிறேன். அதில் குடித்து இருப்பது உறுதியானால் நான் அபராதம் செலுத்துகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து இன்னொரு மிஷின் கொண்டு வந்து சோதனை செய்ததில் குடிக்கவில்லை என்று காட்டியது. அதன் பின்னர் என்னை அங்கிருந்து கிளம்பச் சொன்னார்கள். இது மாதிரி நீங்கள் பாதிக்கப்பட்டால் விழிப்புணர்வோடு இருங்கள்" என்று கூறியுள்ளார்.