Skip to main content

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிப் பேசிய சரத் பவார்; கூட்டணியில் வெடித்த பனிப்போர்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

Cold war breaks out in Maha Vikas alliance for Sharad Pawar praised Eknath Shinde

மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில், அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் இருந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், மகாயிதி கூட்டணி கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த  சூழ்நிலையில் சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க மீது அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியானது. தலைமை பதவி மறுக்கப்பட்டதால் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக கூட்டணி தலைவர்கள் மீது கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வருகிறார். 

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவை புறக்கணித்து அண்மையில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். கூட்டணி கட்சித் தலைவர்களான மூன்று பேரும், மூன்று திசையில் பயணித்து வருவது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டி பேசியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மராத்தி சாகித்ய சம்மேளனம் என்ற வருடாந்திர இலக்கிய நிகழ்வை முன்னிட்டு, சர்ஹாத் என்ற அரசு சாரா நிறுவனம் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. 

Cold war breaks out in Maha Vikas alliance for Sharad Pawar praised Eknath Shinde

அந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார், “சமீப ஆண்டுகளில், நகர்ப்புற பிரச்சினைகள் குறித்து நல்ல அறிவைக் கொண்ட தலைவராக ஏக்நாத் ஷிண்டே அறியப்படுகிறார். தானேயில் குடிமை நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் ஷிண்டே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். எதிர்க்கட்சிகள் மீது அவர் எந்த விரோதத்தையும் வைத்திருக்கவில்லை, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தார்” என்று பாராட்டினார். ஏக்நாத் ஷிண்டேவைப் புகழ்ந்து பேசியிருப்பது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி ஆட்சேபணை தெரிவித்துள்ளது. 

இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா அணி எம்.பி சஞ்சய் ராவத் கூறுகையில், “சிவசேனாவைப் பிரித்து மகா விகாஸ் அரசாங்கத்தை வீழ்த்திய நபரைப் பாராட்டுவதை சரத் பவார் தவிர்த்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டவசமானது. நாங்களும் அரசியலைப் புரிந்துகொள்கிறோம், ஆனால் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் நாங்கள் வேதனைப்படுகிறோம். ஷிண்டே போன்ற துரோகியைப் பவார் பாராட்டியிருக்கக் கூடாது” என்று கூறினார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை பிளவுப்படுத்தி மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை கலைத்து பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்