![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/bbVwTeJy43q5BGOBlrxDfcQeQE29bdBLTPJSe6kBcjs/1739366210/sites/default/files/inline-images/a2522.jpg)
சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள பகுதிக்கு மறைந்த பிரபல பாடகர் 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயர் சூட்டும் நிகழ்ச்சி நேற்று (11/02/2025) நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகன் எஸ்பி.சரண் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''மறைந்த பாடகர் எஸ்.பி.பி வாழ்ந்த இந்த காம்தார் நகர் முதல் தெருவிற்கு அவருடைய நினைவாக அவருடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர், அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். தமிழக முதல்வர் உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்று சென்ற ஆண்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நானும், அமைச்சர்கள் பெருமக்களும் இன்று அரசின் சார்பாக அதற்கான பதாகையை திறந்து வைத்திருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர் இதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்'' என்றார்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.யுடன் திரைத்துறையில் பல்வேறு படங்களில் பணியாற்றிய கவிஞர் வைரமுத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கவிதை பதிவில்,
!['My musical brother... from now on, the public will also chant your name' - Vairamuthu thanks](http://image.nakkheeran.in/cdn/farfuture/hjyNg-Gqtd3xDiT-TShQq3kMIRjLwok4KLkj5qfu5tQ/1739366340/sites/default/files/inline-images/a2032_2.jpg)
'மறைந்த பெரும் பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
வாழ்ந்த தெருவுக்குத்
தமிழ்நாடு அரசு
அவர் பெயர் சூட்டியிருப்பது
கலை உலகத்தைக்
களிப்பில் ஆழ்த்துகிறது
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
கலைமாண்பை அதுகாட்டுகிறது
கைதட்டிக்கொண்டே
நன்றி சொல்கிறேன்
என் இசைச் சகோதரா!
"காற்றின் தேசம் எங்கும் – எந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் – எந்தன்
ராகம் சென்று ஆளும்" என்று
பாடிப் பறந்த பறவையே
உன் புகழ்
எத்துணை உலகம் சென்றாலும்
நீ வாழ்ந்த வீதியிலேயே
வரலாறாய் அமைவது
பெருமையினும் பெருமையாகும்
இனி காலம்தோறும்
அரசாங்க ஆவணங்களும்
பொதுவெளியும்
உன் பெயரை உச்சரிக்கும்
மரணத்தை வெல்லும்
கருவியல்லவோ கலை?' என தெரிவித்துள்ளார்.